விசரன் நான் பினாத்துகிறேன்..... கண்டுகாதீங்க

 இன்றுடன் நமக்கு 45 வயதாகிறது. வாழ்வில் முக்கியமான  ஒரு திருப்பத்தில் நின்று கொண்டிருக்கிறேன் போலிருக்கிறது, மனதுக்குள். நான் இப்போ இளைஞனுமில்லை, வயோதிபனுமில்லை. எனக்குப் பக்கத்தில் இளமையின் காலடித்தடங்களின் சப்தங்கள் கேட்கின்றன,  ஆனால் சற்று தூரத்தே. வயோதிபத்தின் சில வாசனைகளையும் மூக்கருகே முகரக் கூடியதாகத்தானிருக்கிறது. ரெண்டுங்கொட்டான் நிலை போல..

எதிர்காலம் இப்படித்தானிருக்கும் என்று கூற முடியாவிடினும் 20, 30 களில் இருந்த தெளிவற்ற நிலைகளை கடந்திருப்பதால் ஓரளவு பாதையை ஊகிக்கவும் முடிகிறது. இருப்பினும் வாழ்வு தரப்போகும் எதிர்பாரா திருப்பங்களை, முன்பு போல இப்பவும் ஊகிக்க முடியாதிருந்தாலும் அவற்றை எதிர்கொள்ள அனுபவப்படிப்பு இருக்கின்றது என்றே நம்புகிறேன்.

ஏதொவொரு புள்ளியில் தொடங்கிய எனது வாழ்க்கை என்னும் கோடு, வேறு பலரின் வாழ்க்கைப்புள்ளிகளை தொட்டும், தொடாமலும், ஊடறுத்தும், சமாந்தரமாயும் போய்க்கொண்டேயிருக்கிறது, நன்மையாயும் தீமையாயும்.

முன்பு போல பூசல்கள்களை எதிர்கொள்ளும் முறட்டு இளமைக்கால திமிர் பெரிதே அடங்கி சமரசத்தினூடான அமைதியையே விரும்புகிறது.

சந்திரவெளிசத்தில்
மெது காற்றுடனான
அமைதியான கடல்
போல வாழவே விரும்புகிறேன். இருப்பினும் இங்கும் வாழ்க்கை, எனது வாழ்க்கையை தன்னிஸ்டத்துக்கு நிறுவிக்கொண்டேயிருக்கிறது.
நான் மட்டும் அதற்கு விதிவிலக்காயிருக்க முடியுமா என்ன? தற்போது தான் சற்று புரியத் தொடங்கியிருக்கிறது அதுவும், எனக்கு.

கடந்து போன காலங்கள், மனிதர்களையெல்லாம் நேரமுள்ள போது நினைத்துப்பார்ப்பதுண்டு. பலர் காற்றில் அழிந்து போன மணல் எழுத்துக்கள் போலவும், சிலர் கல்லில் எழுத்துப்போலவும் இருக்கிறார்கள். இன்னும் சிலர் என்னை இன்னமும் செதுக்கிக்கொண்டிருக்கிறார்கள். நன்றும் தீதும் இங்குமுண்டு.

பால்ய நட்பு மட்டும் இன்பத்திலும் துன்பத்திலும் பங்கேற்று, விமர்சித்து வந்து கொண்டிருக்கிறது இணைபிரியா தண்டவாளம் போன்று. எதையும், எப்பவும், எப்படியும் கொட்டித்தீர்க்க நம்பிக்கையான இடம் அதைத் தவிர வேறொன்றுமில்லை என்பேன் நான்.

புதிதாயும் சில நட்புகள் கிடைத்திருந்தாலும் அவை சாதாரண நட்பு என்னும் வார்த்தைக்கப்பால் மனதுக்கு அருகாமையில் வர நான் ஏதோ அனுமதிக்கிறேன் இல்லை போலவும் இருக்கிறது. அதற்கான காரணங்கள் என்னவென்றும் புரியவில்லை. அனுபவங்கள் தந்து போன நம்பிக்கையீனங்களாக இருக்கலாம். அவரவர் பலவீனங்கள் அவரவர்களுக்கு. வேர்த்து விறுவிறுத்து தேடியலைந்த பின், நான் முழுமையானவனில்லை என்பதும் புரிந்துதானிருக்கிறது. அதுவும் ஒரு வித ஆறுதல் தான்.

பரஸ்பர நம்பிக்கையை தேடிக் கண்டுபிடிக்க வேண்டியிருக்கும் இந்தக் காலத்தில் என்னைக் கடந்து போகும் பலர், ஏனோ என்னுடன் தங்கள் சோகத்தை நம்பிப் பகிர்கிறார்கள். பலர் முன்பின் அறிமுகமில்லாதவர்களாக இருந்தாலும் கொட்டித்தீர்க்கிறார்கள் மனதின் கனத்தை. அவர்களின் கனங்கள் எனது கனத்தை கனமற்றதாக்குவதை உணர்கிறேன். முள்ளை முள்ளால் எடுப்பது என்பது இதைத் தானோ?

எது எப்படியோ

இன்னும்
சில
மணி நேரங்கள்,
நாட்கள்,
வாரங்கள்,
மாதங்கள்
அல்லது வருடங்கள்
நான் வாழ நேரலாம்.

அது வரை
இந்த விசரனின்
பினாத்தல்களை
சகித்தே ஆகவேண்டும்
என்று
சபிக்கப்பட்டிருக்கிறது
உங்களுக்கு.

.......

கார்டூன் போட்டுத் தந்த குமுதம் கார்டூனிஸ்ட் தம்பி பாலாவுக்கு  மனம் கனிந்த நன்றிகள்.


.

விடைதெரியா வினா

நேற்றிரவு வீடு நோக்கி வந்து கொண்டிருக்கும் போது தொலைபேசியில் வந்த நண்பர் ஒருவர் குமார் அண்ணண் இறந்து விட்டார் என்று துயரம் பகிர்ந்தார். மழையில் நனைந்த உடைகள் போல மனம் கனத்துப் போனது.

ஏறத்தாள 20 வருடங்களுக்கு முன் அவர்கள் வீட்டில் தான் தங்கியிருந்தேன். நான் பொறுப்பின்றி சுற்றித் திரிந்த காலம். அவரோ ஒரு குழந்தைக்கு தகப்பனாய் குடும்பஸ்தனாய் இருந்தார்.அடிக்கடி அறிவுரைகள் சொல்லுவார். அவற்றை இந்தக் காதால் கேட்டு அந்தக் காதால் விட்டதன் பயனை அனுபவித்திருக்கிறேன்.

அவரின் உயரமும், உடம்பும் அவரை பெரியதொரு மனிதராகக் காட்டினாலும், மனிதர் மிக மிக அமைதியானவர். அமைதியான சுபாவம், அமைதியான நடை. அவர் இருப்பது தெரியாமலே இருக்கும் ஒரு இடத்தில் அவர் இருந்தால்.

நினைவுகளில் அவரின் புன்னகை நிழலாடுகிறது. எப்போதும் எவரையும் சிரித்தமுகத்துடன் எப்படி இருக்கிறீர் என்பார். அவரின் உடல்வாகும் சிரிப்பும் வசீகரமாக இருக்கும்.

ஞாயிற்றுக்கிழமைகளில் அவரும், அக்காவும் மகனும் கத்தோலிக்க தேவாலயத்திற்கு தவறாமல் சென்று வருவார்கள். இறைபக்தி மிகுந்தவர். பொது விடயங்களிலும் மிக ஆர்வமாக நின்று செயல்படக் கூடியவர்.

இலங்கையில் சர்வேதேச ஹோட்டல் ஒன்றின் முகாமையாளராக பணியாற்றியவர். இங்கும் அமெரிக்க தூதுவராலயத்தில் பணியாற்றியவர். அவரின் பணிவும் ஆர்ப்பாட்டமில்லா தன்மையுமே எனக்கு அவரில் பிடித்தவை.

அவர் கத்தோலிக்கராக இருந்தாலும் எனது திருமணத்தை அவர்கள் வீட்டில் நடாத்தித்தந்தவர். அவரின் மகனை மாப்பிள்ளைத் தோழனாகவும் இருக்க அனுமதித்தவர். திருமணத்தின் போது உனது உற்றார், உறவினர்கள் என பலர் அவர்கள் வீட்டில் தங்கயிருந்த போது சற்றும் முகம் சுளிக்காமல் அவரும், அக்காவும் கவனித்தனுப்பியதை நான் மறத்தலாகாது.

தொழில் நிமித்தம் இடம் பெயர்ந்து போன பின் ஏறத்தாள 18 ஆண்டுகளின் பின் தற்செயலாக சந்தித்தபோது என் பெயரை மறக்காமல் பெயர் சொல்லி அழைத்து ஆச்சர்யப்படுத்தினார். இறுதியாக சந்தித்த போது மிகவும் மெலிந்திருக்கிறீர்கள் என்ற போது குசும்பு கலந்த குரலில் மாப்பிளை மாதிரி என்டு சொல்லும் என்று சொன்னதை நினைத்துப் பார்க்கிறேன். நம்பமுடியாதிருக்கிறது அவரின் மறைவு.

நேற்று மாலை அவரின் வீடு சென்று அக்கா, அவரின் மகன், உறவினர்களை சந்தித்து திரும்பும் போதும் அவரின் நினைவுகளே என்னைத் தொடர்ந்து கொண்டிருந்தன.

அவரின் சுகயீனம் பற்றி அறிந்து ஒரு வாரத்துக்குள் இப்படியாகிவிடும் என நான் எதிர்பார்த்திருக்கவில்லை. அவசர உலகின் வேகத்தில் இறுதியாய் அவரைச் சந்திக்கும்  சந்தர்ப்பத்தை இழந்திருக்கிறேன். காரணம் என்ன? வாழ்வின் வேகத்தில் மனித உணர்வுகளை மதிக்க மறந்திருக்கிறேனோ என எண்ணத் தோன்றுகிறது.


இறந்த பின்பும் ஏதோ என்றை எனக்குணர்த்திப் போயிருக்கிறார் குமார் அண்ணண் என்றே எண்ணத் தோன்றுகிறது. இந்த முறையாவது அவரின் அறிவுரையை கேட்க வேண்டும் என நினைத்திருக்கிறேன்.

எப்போ யாருக்கு என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாதிருக்கிறது. ‌நேற்றிருந்த குமார் அண்ணண் இன்றில்லை. இதே போல் எனக்கும் ஒரு நாள் குறிக்கப்பட்டிருக்கும். அது எப்போ என்பது வாழ்வின் விடைதெரியா வினாக்களில் ஒன்று.

நாளை என்று ஒன்று எனக்கிருந்தால் சந்திப்போம்.

குமார் அண்ணணின் ஆத்மா சாந்தியடைவதாக.

.

வாழ்வுடனான பூசலும் சமரசமும்


இன்று எழுத்தாளர் ஜெயமோகனின் ப்ளாக் வாசித்துக்கொண்டிருக்கையில் கண்ணில் பட்டது அவர் எழுதியிருந்த இந்த வாக்கியம் ” இன்று எனக்கு கொஞ்சம் வயதாகிவிட்டது. பூசலை விட சமரசமே பிடிக்கிறது
அவரது ஆக்கத்தை தொடந்து வாசிக்க முடியாதளவுக்கு மனம் கடந்து போன 45 வருடங்களையும் மெதுவாய்க் கடந்து வரத் தொடங்கிற்று.

எனக்கும் எழுத்தாளர் ‌ ஜெயமோகனுக்கும் ஒரே வயதிருக்கும் அல்லது அவர் சற்று வயது குறைந்தவராகக்கூட இருக்கலாம். அவருக்கும் எனக்கு வந்திருக்கும் ஞானம் வந்திருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.. அல்லது அதைத் தான் தான் வாழ்வின் புரியாத தத்துவங்கள் என்றும் வாழ்வனுபவம் என்றும் சொல்கிறார்களா??

சமரசத்தில் இரண்டு வகைகளிருக்கிறது போலிருக்கிறது எனக்கு. முதலாவது ஒருவர் மற்றவருடன் செய்யும் சமரசம். மற்றையது நாமே நம்முடன் செய்து கொள்ளும் சமரசம்.

முதலாவது சமசரத்தை அடைய ஈகோ என்னும் பேயை வென்றாக வேண்டும். இது மிகக் கடினமானது.

ஆனால் இரண்டாவது மிக இலகுவானது, மிகுந்த ஆறுதலைத்தருவது.

இளமையும், திமிரும் இருந்த நாட்களில் நானும் கருத்து வேறுபாடுடையவர்களுடன் மோதியவன் தான். ஆனால் அடி தடி என்று பாடசாலைக் காலத்தின் பின்பு இறங்கியதில்லை என்றாலும் இந்தியாவில் மொக்கை போட்டுத் திரிந்த காலத்தில் இயக்கம் அது..அது என்று கதை தொடங்கினால் பிறகு என்ன நட்புகளுடன், அன்று மாலை படம் பார்க்கும் போகும் வரை பேச்சுவார்த்தை இல்லாமல் போகுமளவுக்கு காரசாரமாயிருக்கும். (அடிதடி வார மாதிரி இருக்கும் ஆனால் வராது.)

நோர்வே வாழ்க்கையிலும் விளையாட்டு, பொது வேலைகள், சங்கங்கள் என்று வாழ்ந்து திரிந்த காலங்களிலும் பல நட்புகளை நானும், அவர்களும் ”சமரசம்”  என்னும் கையை நீட்டிக் கொள்ளாததனால் இழந்திருக்கிறோம்.
அவற்றில் சிலவற்றில் இன்னும் அந்த வடுக்கள் மறையாதிருப்பது ஏனோ வலிக்கிறது. நிரந்தர வடுக்களை ஏற்படுத்த வேண்டும் என்று செய்யப்பட்ட செயல்களல்ல அவை. இருப்பினும் தற்போது திரும்பிப் பார்த்தால் அவற்றைத் தவித்திருக்கலாமோ என எண்ணத் தோன்றுகிறது.

எல்லோருக்கும் பிடிக்கும்  வகையில் நடந்து கொள்வதென்பது முடியாதென்பதை நான் அறிந்து கொண்டதும் அந்தக் காலத்தில தான். கருத்து வேறுபாடு இருந்தாலும் நட்பாய் இருக்க முடியும் என்று நம்புபவன் நான். இருப்பினும் யதார்தத உலகத்தில் அது இலகுவாயில்லை. இரு கைகளும் தட்டினால் தானே சத்தம் வருகிறது

சிலர் வாழ்க்கையில் மறக்க முடியாத, மறக்கக் கூடாத வடுக்களை தந்துபோவார்கள். என் வாழ்விலும் இப்படிப்பட்டவர்கள் சிலர் இருக்கிறார்கள். தேவையில்லாத கதைகள், பொய்க் கதைகள், ரணப்படுத்தும் வார்த்தைகள், முதுகில் குத்துபவர்கள், முகத்தில் உமிழ்பவர்கள், கூட இருந்து குழிபறித்தவர்கள், நட்பென்று பொய் சொன்னவர்கள் என்று ஒரு தொகை அல்லல்கள் கடந்து வந்திருக்கிறேன்.

காலப் போக்கில் இவர்களுடன் சமசரத்தை விரும்பாவிட்டாலும் பூசலில்லாமல் இருக்கவே விரும்புகிறது மனம். இதுவும் ஒரு வித சமரசம் தான். இந்த சமரசம் நான் என்னுடன் செய்துகொண்ட சமரசம்.

இதனாலோ என்னமொ மனதில் இருந்த பாரங்கள், அழுத்தங்கள், வேதனைகளெல்லாம் குறைந்தது போலிருக்கிறது தற்போது.

காலம் போகப் போக பிரச்சனைகளை தவிர்த்து, அல்லது பிரச்சனைகளை தருபவர்களை தவிர்த்து அமைதியாய் வாழவே விரும்பகிறது மனம். வயது தான் காரணமாயிருக்குமோ இதுக்கும்? என்னையறியாமல் நான் வயதாகிக்கொண்டிருக்கிறேன் போலிருக்கிறது.

இவ்வளவையும் வாசித்துவிட்டு நான் பூசலின்றி வாழ்கிறேன் என்று நீங்கள் நினைத்தால் எனக்கும் உங்களுக்குமிடையில் சமரசம் தேவைப்படுகிறது என்றர்த்தம்.

புரிந்ததா நட்பே?


இன்றைய நாளும் நல்லதே
எழுத்தாளர் ஜெயமோகனுக்கு எனது நன்றிகள்


.

உலாவித்திரியும் கதைகள்

ஆதிகாலம் தொடக்கம் மனிதர்களுக்கு கதைகள் என்றால்  ஒரு ”இது” இருக்கத் தான் செய்கிறது. ஒவ்வொருத்தரைப் பொறுத்தும் இந்தக் கதைகளின் இருப்பிடம், தன்மை,  இலக்கு, பொருள் என்பன மாறுபடுகின்றது. ஆண்களுக்கு ஒரு வித கதைகளும், பெண்களுக்கு இன்னொருவித கதைகளும் பிடிக்கும் என்றும் வாசித்திருக்கிறேன். சிலருக்கு இன்னொருவரைப் பற்றியே பேசுவது சுவராசியமாக இருக்கிறது.  அவர்களிடம் கேட்ட கதைகளை இன்னொருவர் இன்னொருவருக்கு  சொல்லும்போது அதற்கு கை, கால்களை பூட்டி விடுகிறார்கள். பூட்டப்பட்ட கையும் காலும் மெதுவாய் தவழ்ந்து, மெது நடை பயின்று பின்பு பெரு வேகம் எடுத்து உலாவித்திரியும் பலரின் வாய்களில். முதலில் சொன்னவருக்கே அக்கதை திரும்பி வரும் போது அவருக்கே புதிய கதை போல் மாறியிருக்கும்.

இன்னும் சிலர் இருக்கிறார்கள் தங்கள் பக்கத்து அநியாயங்களை நியாயப்படுத்துவதற்காக சில கதைகளுக்கு கை, கால் பூட்டி விடுகிறார்கள். பல இடங்களில் இதனால் நியாயம் அடிபட்டும் போய் அந்தக் கை கால் பூட்டப்பட்ட கதைகள் பலரை ரணப்படுத்தியபடியே வாழ்ந்து கொண்டிருக்கும், பல காலம். ஆனால் கதைக்கு கை கால் பூட்டியவருக்கு மட்டும் தெரியும் அவர் தொடங்கி வைத்த நியாயத்தின் நியாயம். ஆனால் அவர் மௌனித்திருப்பார்... என்றும் போல். மனிதமே இல்லாத மனிதர்கள் இவர்கள்.

இப்படித்தான் நானும் உதவியென்று போய் மாட்டிக் கொண்டு முழித்திருக்கிறேன் பல தடவைகள். இருப்பினும் தற்போது வாழ்க்கை ”பன்னாடைத்” தத்துவத்தை கற்றுத்தந்திருக்கிறது எனக்கு. அதென்ன பன்னாடைத் தத்துவம் என்று உங்களில் சிலர் கேட்கலாம். வடிகட்டல் தத்துவம் தான் அது. தேவையானதை மட்டும் எடுத்துக்கொண்டு மற்றையதை ஒரு காதால் கேட்டு மற்றக் காதால் விடுவது தான் அதன் ரகசியம்.

இதைக் கற்க கல்லூரிகள் கிடையாது வாழ்கை என்றும் கல்லூரியை விட. நானும் அண்மைய காலங்களில் தான்  இந்தக் கல்லூரின் சில பாடங்களில் ”சாதாரண” சித்தியடைந்திருக்கிறேன். இக்கல்லூரியில் சிறப்புச்சித்தியடைந்தவர்கள் இலர் என்றே கூறுகிறார்கள்.
நீங்கள் எப்படி?

.

கடவுளுடன் வாழ்ந்த ரணமற்ற நாள்

 தலையங்கம் பார்த்து பயப்படாதீர்கள். இது சென்ற வருடம் (2009) ஐப்பசி மாதத்தில் ஓர் நாள் என் வா‌ழ்வில் நடந்த கதை.

அன்றைய நாளின் பொழுதுகள் என்றென்றும் என் வாழ்வின் ஞாபகத் தோரணங்களாக தொங்கிக்கொண்டேயிருக்கப் போகின்றது என்பது மட்டும் உறுதி. இன் நாளை எனக்குத் தந்த எனது ”பூக்குட்டிக்கு” பரிசாய்த் என்னத்தைத் தர.... என் அன்பையும், உயிரையும் தவிர்த்து?


இது சற்றே நீண்ட கதை.

மனைவியும், மூத்த மகளும் ஒஸ்லோவுக்கு அரங்கேற்றம் ஒன்றிற்காகப் போயிருக்கிறார்கள். நானும் அட்சயாவும் வீட்டில் இருப்பதாக முடிவாகியது.

அவர்களை விமான நிலையத்தில் விட்டு வெளிக்கிட்டதும்......

அப்பாஆஆ என்றார் (இப்படி கடவுள் அழைத்தால் பக்தன் உருகிவிடுவான் என்பது கடவுளுக்கு நன்றாகவே தெரியும்)
என்னய்யா? என்றேன்
கண்ணால் சிரித்து, பக்தனை உருக்கிய படியே மீண்டும் அப்பாஆஆ என்றார்
சொல்லுங்கம்மா என்றார்...
அது, அது, அது என்று பத்து அது போட்டு நீ எனக்கு ஒரு ”சொக்கா” கடன் (மீளத்) தரவேணும் ஞாபகம் இருக்கா? என்றார் நோர்வே மொழியில்
அப்படியா? எப்போ கடன் வாங்கினேன் என்றேன்?
அது, அது, அது போன மாதம் என்றார்
கடவுளின் தந்திரம் புரிந்தது...
எனக்கு சுகர் ப்ரி சோடாவும் வாங்கி, அவரின் கடனையும் அடைத்‌தேன்.
வரும் வழி முழுக்க காரை தமிழாலும், நொஸ்க்காலும், கல கல வென்ற முத்துக்களாலும் கொட்டி நிறைத்தார்

சோடா குடித்து பெரிதாய் நீண்டதோர் ஏவறை விட்டேன்
அப்பாஆஆ! என்றார் மிகக் கடுமையாய்
கண்ணை சிமிட்டியபடியே என்ன? என்றேன்
உனக்குத் தெரியும்! என்றார் பெரிய மனிசி போல
மீண்டும் ஏவறை விட்டேன்
நிறுத்து!! என்றார் மிகக் கடுமையாய்நொர்வேஜிய மொழியில்.

உலகிலேயே ஆழமான கடல் கீழ் சுரங்கம் எங்கள் இடத்திற்கு அருகில் உண்டு. அது தாண்டித் தான் வீட்ட வரவேணும். சுரங்கத்தில் நாம் கடல் நீர் மட்டத்தின் கீழ் போகுமிடத்தை நீலமான ‌லைட் ஆல் மார்க் பண்ணியிருக்கிறார்கள்.

பப்பாஆ, நீந்து, நீந்து கடலினுள் போய் விட்டோம் என்றார்.
தானும் நீந்துவது போல் கையை ஆட்டினார்.
அந்தா மீன் போகுது என்றார்...
சேர்ந்து சிரித்தோம்

(சம்பாசனை தமிழிலும், நொஸ்க்கிலும் நடக்கிறது)

இதுதான் உலகிலேயே நீளமான சுரங்கமா? என்றார்
இல்லை, ஆழமானது என்றேன்
அப்ப நீளமான சுரங்கம் எவ்வளவு நீளம்?
தெரியாது... கிட்டத்தட்ட 40 கி.மீ என்று அறிந்ததாக ஞாபகம் என்றேன்
அது எவ்வளவு தூரம்?
உனது வீட்டில் இருந்து 40 தரம் உனது பாடசாலைக்குப் போகும் தூரமிருக்கும் என்றேன்
அவ்வளவு தானா? என்று அலுத்துக் கொண்டார்

பிறகு முன்னுக்கு போன காரை ஓவர்டேக் பண்ணு என்றார்...
வேண்டாம் என்றேன்
அதிசயமாய் ஓகே என்றார்.

சுரங்கம் முடிந்து வெளியே வந்ததும். முகில்களற்ற வானமும், பச்சையான நிலங்களும், உயரமான மலைகளும், நீலமான கடலும் எங்ளை வரவேற்றன.

பப்பாஆ! உலகத்தில் வடிவான இடமெது என்றார்
எனன சொல்வது என்று யோசித்துக்கொண்டு இருக்கும் போது
பதில் சொல்! என்றார் நொஸக் மொழியில்
நீ தான் என்றேன்
இல்ல, எந்த இடம்? என்று கேள்வியை தெளிவுபடுத்தினார்
தனக்கு, நாம் வாழும் ஊரின் பெயரைக் கூறி அதுதான் வடிவு என்றார்..
பெருமையாக இருந்தது

கடந்து போகும் மலைகளைக் காட்டிய படியே
அந்த மலை ஏறியிருக்கிறாயா? இந்த மலை ஏறியிருக்கிறாயா என்று கொண்டே வந்தவர் திடீர் என தனக்கு தலைஇழுக்க பிரஸ் வாங்கனும், ஜக்கட் வாங்கனும், உடம்புக்கு போட கிறீம், சொக்கா வாங்கனும் என்றார்...

சுதாரித்துக் கொண்டு என்ன சொக்காவா என்றேன்.. கல கல என்று முத்துக்களைக் கொட்டினார். அவரின் கண்ணும் சிரித்தது. நானும் சிரித்தேன்

திடீர் என காரி்ல் இருந்த எல்லா பட்டன்களையும் போட்டு விளையாடிக் கொண்டிருந்தார்....
பிறகு அவற்றையெல்லாம் நிறுத்தி விட்டு ஸ்டியரிங்கை பிடித்து என்னுடன் சேர்ந்து காரோடினார்.
ஸ்டியரிங்கை வலப்பக்கமும், இடப்பக்கமும் (ஷிக் ஷாக் போல) ஆட்டி ஆட்டி தானும் அதே போல் ஆடினார்.
வேண்டாம், பின்னுக்கு கார் வருது என்றேன். நிறுத்தினார்.

கடைக்கருகில் வாகனத்தை நிறுத்தியதும்
தலையிழுக்கும் பிரஸ் வாங்கும் கடையினுள் சாதாரணமாய் நடந்து போய் தனக்கு ப்ரஸ் வாங்க வேனும். எங்க இருக்கு என்றார்?
விற்பனையாளர் வந்து காட்டினார்.
இது தான் வேணும் என்றும், தன்னிடம் இப்படி யொன்று இருந்ததாகவும் அது துலைந்ததால் புதிது வாங்குவதாகவும் விற்பனையாளருக்கு சரித்திரம் வளக்கினார்.
அவரும் தலையாட்டி கேட்டுக் கொண்டிருந்தார்
சரி காசைக் குடு என்னும் தொனியில் பார்வையால் கட்டளையிட்டார்
கார்ட்ஐ இழுத்தேன்.

கையை பிடித்த படி, மற்றைய கையால் பையை சுற்றியபடியே துள்ளித் துள்ளி வந்தார் காருக்கு.

உன் நண்பின் வீடு வருகிறது.. அவள் வெளியில் நின்றாள் ”ஹோன்” அடிப்பமா என்றேன்?
துள்ளலுடன் ”யா” என்றார்
நண்பின் வீட்டிற்கு வெளியில் அவர்களின் நண்பிகள் கூட்டமே நின்றிருந்தது
ஓ.. யெஸ் என்றார்
காரை நிறுத்தக் கட்டளையிட்டார்
நிறுத்தினேன்
இறங்கியோட எத்தனித்த போது
ஜக்கட், கிறீம் வாங்க வில்லையா? என்ற போது
அதை மற! என்னும் தொனியில் பதில் வந்தது
சரி என்றேன்
நின்று கொஞ்சம் யோசித்தவர், இல்ல கடைக்கு விடு காரை கடைக்கு என்றார்
கெதியா போ என்றார் நொஸ்க் மொழியில்
நீ 60 வேகத்தில் இல் போறாய் 100வேகத்துக்கு க்கு போ என்றார்
இல்லை என்றேன்
போ போ என்று விரட்டினார்
கடையில் அவசர அவசரமாய் ஜக்கட், கிறீம் வாங்கினார்.
அதற்கிடையில் நண்பின் தந்தையுடன் என்னை ஒப்பந்தம் செய்யச் சொன்னார்
செய்தேன்
ப்பாஸ்ட், ப்பாஸ்ட் என்று நொஸ்க் மொழியில் உட்சாகமாய் துள்ளியபடியே காரில் வந்தார்.

காரை நிறுத்தியதும் கழுத்தை கட்டி லஞ்சம் தந்தார்
கண நேரத்தில் என்னை மறந்து காற்றில் பறந்தார்

ஒப்பந்த நேரம் வந்தது.. கூப்பிடப் போனேன்
கடவுளின் நண்பியின் தங்கை சிட்டாய் பறந்து வந்து கழுத்தைக் கட்டிக் கொண்டு தூக்கு என்றாள். பக்திப்பரவசத்தில் அள்ளி எடுத்தேன்... கடவுள் சற்றுத்தள்ளி என்னை ஓரக்கண்ணால் அவதானிப்பது தெரிந்தது.

வாரீங்களா ஐயா? என்றேன்
பப்பாஆ, ப்பப்பாஆஆஆ என்றார்
புரிந்தது கடவுளின் எண்ணம்
அங்கு வந்ததிருந்த இன்னொரு நண்பியின் வீட்ட போகவா என்றார்.
ஐம்பதெட்டு பப்பாஆ க்கள் காற்றில் வந்த வண்ணமிருந்தன
அந்த நண்பியோ, எனது பதிலை எதிர்பாக்காமல் தனது தாய்க்கு தெலை‌பேசியில் இலக்கங்களை தடடிக் கொண்டிருந்தாள்.
அங்கிருந்து பதில் வரவில்லை.
கடவுள்களுக்கிடையில் ரகசிய பேச்சு வார்த்தை நடந்தது
சமாதானத் தூதும் (கட்டளையாய்) வந்தது

அதாவது நண்பியை அவரின் வீட்டில் இறக்கிவிட வேண்டுமாம்.
சரி என்றேன்
இரண்டு கடவுள்களுடன் உள் ரோட்டு ஒன்றில் பயனித்தேன்
புதிய கடவுளின் பளிங்கு போன்ற நீலக் கண்களும், காற்றில் அசைந்தாடிய சுருட்டை முடியையும் கொள்ளை அழகாயிருந்தது (அவளின் பெயர் ”ஆர்ல”. நான் ”பர்ல” என்றே அழைப்பேன் (பர்ல என்றால் முத்து என்று பொருள் படும்)
எனது கடவுள், அப்பா ஷிக் ஷாக் ஆக காரை ஓட்டுங்கள் என்றார்.
ஓடினேன்
கார் போன போன போக்கில் கல கல என சிரித்து, ஆடினார்கள். எனது நெஞ்சையும், காரையும் பெருமைப்படுத்தினார்கள்
முஸ்பாத்தியாய் இருந்ததாகவும், நன்றி என்றும் சொன்னார்கள்

முத்தின் வீடு வந்தது
முத்துக் கடவுள் சிட்டாய் பறந்து போய், அனுமதி பெற்று வந்தார்
எனது கடவுளை கைகோத்து அழகாய் அழைத்துச் சென்றார்.
வீட்டுக் கதவை பூட்ட முதல் மறக்காமல் கை காட்டினார்கள் கடவுள்கள்..
பூக்கள் சையசைப்பது போலிருந்தது

மீண்டும் வீடட வந்தேன்.
ரீவியில் புட்போல் மாட்ச் ஓடிக்கொண்டிருந்தது....

திடீர் என தொலைபேசில் கடவுள் வந்தார்
என்னய்யா என்றேன்
தனது பொம்மைகள் உடனடியாக வேணும் என்றார்
”என்ன” என்றேன் சிறுது எரிச்சலில்
தனது பொம்மைகள் உடனடியாக வேணும் என்றார், எனது எரிச்சலை சற்றும் கவனிக்காமல்
தவிர, பப்பாஆ! நண்பி என்னை இன்றிரவு தங்குமாறு ‌கேட்கிறாள் என்றார்
புரிந்தது சகலமும்..
பொறு, பெரிய இடத்திற்கு போன் பண்ணி கேட்டு சொல்கிறேன் என்றாள்
ஐ லவ் யூ என்றாள் நொஸ்க் இல்.
கரைந்து போனேன் அதைக் கேட்டதும் (இது கடவுளுக்கு நன்கு தெரியும்)

போண் பண்ணினேன் பெரிய இடத்திற்கு... வேண்டாம் என்றார்
பாவம் கடவுள் என்றேன். வாதாடியதனால்.. சரி ஓகே என்றார்

போண் பண்ணி முத்துக் கடவுளின் தாயாரிடம் பேசி
எனது கடவுளிடமும் சொன்னேன்
அவரின் துள்ளல் தெலைபேசியினூடாகத் தெரிந்தது

சிகக்ல் ஒன்று இருந்தது.. (கடவுளின் பொம்மைகள் எல்லாம் ஒரு பெட்டியில் போட்டு கட்டி வைக்கப்பட்டிருந்தது)
சொன்னேன் சிக்கலை கடவுளுக்கு
அந்த பார்பி, கறுப்பு பார்பி, அந்த சின்ன பார்பிஐ மட்டும் கொண்டு வா என்று அடுக்கிக் கொண்டே போனார்
இறுதியாக எல்லாத்தையும் கொண்டு வா என்றார்
ஐயா! என்று இழுத்தேன்
பாய்! என்று சொல்லி தொலைபேசி இணைப்பை துண்டித்தார் கடவுள்

இரவு உடுப்பு, அவரின் கடடிப்பிடித்து படுக்கும் ”உடுப்பு போடட கரடிப் பொம்மை”, அவர் தடவிக்கொண்டே படுக்கும் அம்மாவின் பழைய டெனிம் ஜீன்ஸ, பல் துலக்க பிரஸ் எல்லாம் எடுத்து வைத்தேன்.
கட்டிவைத்த பொம்மை பெட்டியை இறக்கினேன்.
பொம்மைகளின் நிறங்களும் வடிவங்களும் கடவுள் சென்ன மாதிரி இருக்கவில்லை. தலை சுத்தியது.
கடவுளுக்கு போன் பண்ணினேன்...
என்ன? என்றார் (‌போன் பண்ணியதை அவர் விரும்பவில்லை என்பது மட்டும் புரிந்தது)
ஐயா! பார்பிகள் கனக்க இருக்கு என்று இழுத்தேன்...
மீண்டும் அந்த பார்பி, கறுப்பு பார்பி, அந்த சின்ன பார்பிஐ மட்டும் கொண்டு வா என்று அடுக்கிக் கொண்டே போனார்
கஸ்டம் அம்மா என்றேன்..
அப்பா, அப்ப அந்த பெட்டியை பொண்டுவாங்கோ என்றார்
வெடித்துச் சிரித்து ஓகே என்றேன்

முத்துக் கடவுளின் வீட்டில் கார் நிற்க முதலே கடவுள்கள் ஓடிவருவது தெரிந்தது
பெட்டியைக் கிண்டி இது தான், இது தான் என்று எடுத்தார்
உடுப்பு பையில் கர‌டி பொம்மை இருக்கா, அம்மாட டெனிம் இருக்கா என்றார்?
ஓம் என்று சொல்லி... ஐயா போன் பண்ணுங்கோ, காலமைக்கு புட்போல் மாட்ச் இருக்கு, வெள்ளன வருவேன் என்றேன்... அதற்கிடையில் கடவுள்கள் கல, கல முத்துக்களை சிந்தியபடியே வீட்டுக் கதவை மூடிக்கொண்டிருப்பது தெரிந்தது.

வீட்ட வந்தேன்...
கடவுளில்லா இரவு என்முன் விரிந்து கிடந்தது
கடவுள் எது செய்தாலும் அதில் ஒரு அர்த்தமிருக்கும்..

இவ்வளவும் எழுதிவிட்டு பிழை திருத்திக் கொண்டிருக்கும் போது தொலைபேசி அழைத்தது

மறுபக்கத்தில் கடவுள்
என்னய்யா? என்றேன்
வாங்கோ என்று தழுதழுத்தார்
ஏனய்யா என்றேன்
வாங்கோ எனக் கட்டளையிட்டார்

அங்கு போன போது
முத்துக்கடவுளின் கண்ணகளில் ஏமாற்றமும், நித்திரை வழிந்தோ‌டிக்கொண்டிருந்தது

எனது கடவுள் காரில் ஏறியதும்
பப்பாஆ என்றார்
ஏன்னய்யா என்ற போது
கண நேரம் முழித்திருக வேண்டினார்
மறுக்கமுடியுமா?
சரி என்றேன் (நாளை ஞாயிறு என்பதால்)

இப்ப
கடவுள் என்னருகிலிருக்கிறார்
இல்லை .... இல்லை
நான் தான் கடவுளுக்கருகிலிருக்கிறேன்

கடவுள் எது செய்தாலும் அதில் அர்த்தமிருக்கும்


என் உயிரிலும் மேலான எனது பூக்குட்டிக்கு இது சமர்ப்பணம்!


.
.

மறதியும் மறையாத மனிதமும்

தனக்கு காது கேட்காது, எனவே உன்னுடன் தொலைபேசியில் பேசமுடியாது என்று மின்னஞ்சல் மூலமாக சில நாட்களுக்கு முன்பு அறிமுகமாகினார் இன்றைய கதாநாயகன்.
மிக விளக்கமாக தனது கணணியின் பிரச்சனைகள் பற்றி கடிதம் போட்டார். கேட்ட கேள்விகளுக்கும் விரிவாக பதில் எழுதினார். இன்று சந்திப்பதாக உறுதி செய்து கொண்டோம் மின்னஞ்சலூடாக.

போய் இறங்கினேன்.
நோர்வேஜியர்.
வயதானவர், ஏறத்தாள 70 வயதிருக்கும்.
கறுப்பன் ஒருவனை அவர்கள் எதிர்பார்க்கவில்லை என்பது புரிந்தது. ஆயினும் சற்று நேரத்தில் மிகவும் சகஜமாகப் பழகமுடிந்தது அவர்களுடன்.

கணவருக்கு காது கேட்காது, எனவே வார்த்தைகளை மெதுவாய் உச்சரித்தால் வாயசைவை வைத்து சொல்லை ஊகித்துக் கொள்வார் என்றார் மனைவி. காது கேட்காவிட்டாலும் அவரால் சரளமாகப் பேச முடிகிறது. அண்மையில் தான் ‌காது கேட்கும் சக்தியை இழந்தார் எனவும் அறியக்கிடைத்தது.

மனைவிக்கு ஞாபகசக்தி மிகவும் குறைவாக இருப்பதாகவும், பலகாலமாக இந்நோயால் அவர் அவதிப்படுவதாகவும், இது வரை நான்கு அறுவைச்சிகிச்சைகள் செய்துள்ளார் என்றும் அடுத்த கிழமை ஐந்தாவது அறுவைச்சிகிச்சை செய்யவுள்ளதாகவும் சொன்னார் கணவர்.

மனைவி நான் அங்கிருந்த 2 மணிநேரத்திலும்  எனது பெயரை பல தரம் கேட்டார். தனது பெயரை பல தரம் சொன்னார். நீ இதை பல தரம் சொல்லிவிட்டாய் என்று கணவர் சற்று உரமாகச் சொன்னதும் சற்று அமைதியடைவார். சற்று நேரத்தில் பெயர் பற்றி மீண்டும் கேட்பார், சொல்லுவார்.

எதையும் கேட்க முதல் நான் உன்னைக் குழப்புகிறேனா என்று கேட்டு நான் பதில் சொன்ன பின்பே தொடர்ந்தார். குழந்தை போலிருந்தது அவரின் பல நடவடிக்கைகள். சில நிமிடங்களுக்கு முன்பு நடந்தவற்றையும், அண்மையில் நடந்தவற்றையும் அவரால் ஞாபகத்தில் வைக்க முடியவில்லை. ஆனால் பல ஆண்டுகளுக்கு முன் நடந்தவற்றை நன்றாக நினைவில் வைத்திருந்தார்.

தான் 26 நாடுகளுக்கு சென்றிருப்பதாகவும், நீ எத்தனை நாடுகளுக்கு சென்றிருக்கிறாய் என்று சிறு பிள்ளை போல் கேட்டார். நான் கிட்டத்தட்ட 10 - 12 என்ற போது போட்டியில் வென்ற சிறு பிள்ளையாய் குதூகலித்தார். கணவரோ சற்று சங்கடப்பட்டார்.

நான் கணவருடன் பேசுகையி்ல் மிக ஆறுதலாக வார்த்தைகளை உச்சரித்தேன்.. பல நேரங்களில் புரிந்து கொண்டார். சில நேரங்களில் மனைவியைப் பார்த்தார். மனைவி என்னைவிட மிக ஆறுதலாக உச்சரித்துக் காட்டினார். ஆனால் மனைவி நான் சொல்லியவற்றை அவருக்கு சொல்ல முதலே மறந்துபோனார். திரும்பக் கேட்டு மீண்டும் சொல்வார். நீண்ட வசனம் எனின் மீண்டும் கேட்பார்.

கணவரின் காதுக்குள் ஒரு வித இரைச்சல் சத்தம் கேட்க ஆரம்பித்து பின்பு  காது கேட்காமல் போயிற்றாம். ஆனால் இரைச்சல் சத்தம் பெரிதாய் கேட்டுக்கொண்டிருந்ததாகவும், அதை தாங்கமுடியாமல் தற்கொலைக்கு கூட கணவர் முயன்றார் என்றும் சொன்னார் மனைவி. லத்வியா நாட்டுக்கு தாங்கள் போயிருந்த நேரம் அங்கிருந்த ஒரு வைத்தியர் நீண்டதோர் சிறிய குழாயை மூக்கினூடாகச் செலுத்தி ஏதோ மறுத்துவம் செய்ததால் தற்போது காது இரைச்சல் இன்றி நிம்மதியாக வாழ்வதாயும் சொன்னார்.

அந்த மருத்துவரை நோர்வேக்கு அழைத்து தமது வீட்டில் விருந்தினராக தங்கவைத்து ஊர் சுற்றிக்காட்டியதாகவும், அவர் தற்போது தங்களின் குடும்ப நண்பர் என்றும் கூறினர்.

மனைவி, தனக்கு வண்ணத்துப்பூச்சிகள் என்றால் ரொம்பவும் இஸ்டம் என்றும், தனக்கு பல பா‌ஷைகளில் வண்ணத்துப்பூச்சியை எப்படி அழைப்பது என்று தெரியுமென்றார். நான் அப்ப தமிழிலும் கற்றுத் தருகிறேன் என்றேன். பெரிதாய்ச் சிரித்தார். வரும் போது தமிழில் அதை எழுதியும் வாங்கிக் கொண்டார்.

தங்கள் வீட்டின் பின்னால் அதிகளவில் அணில்கள் வசிப்பதாயும். பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நாள் ஒரு அணில் தனது கைக்கருகில் வந்து கையிலிருந்த உணவை எடுத்துச் சென்றதை மிகவும் பெருமையுடன் விபரித்தார்.

தமக்கு ஒரு மகன் தான் என்றும், தனது சுகயீனம் காரணமாக வேறு பிள்ளைகளை பெற்றுக்கொள்ள முடியாதிருந்தது என்றும் சொன்னார். தங்களது பேரப்பிள்ளைகளின் படங்களைக் காட்டினர். அவர்கள் அருகில் வாழ்வதாயும், மிக அழகானவர்கள் என்றும் சொன்னார் மனைவி.

அவர்கள் இருவரும் நண்பர்கள் போல் பழகினர். ஒருவரின் பலவீனத்தை மற்றவர் ஈடுசெய்து அவர்கள் தங்களை முழுமையாக்கிக் கொள்வது போலிருந்தது எனக்கு. கணவரின் பொறுமை அசாத்தியமாகதாக இருக்கவேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். அதே போல் கணவர் மீண்டும் மீண்டும் கேட்ட கேள்விகளுக்கு முகம் சுளிக்காமல் மிகப் பொறுமையாகப் பதிலளித்தார் மனைவி. அவரும் பொறுமைசாலி தான்.

கணணி திருத்தி வீடுவந்து இரவு உறங்கப்போகும் போது ஒரு குறுஞ்செய்தி வந்திருந்தது அவர்களிடமிருந்து.

கணணி நன்றாக ‌வேலை செய்கிறது. மனைவின் கேள்விகளுக்கு முகம் சுளிக்காமல் பொறுமையாய் பதிலளித்தமைக்கு மிக்க நன்றி. என்றிருந்தது அதில்.

மனம் ஏதோ ஒரு பரவசத்தை உணர்ந்து கொண்டிருந்தது.

இன்றைய நாளும் நல்லதே

.

கதையும்... காதில் இரத்தமும்


ஹலோ ஐ ஆம் பார்பரா என்று ஆங்கிலத்தி்ல் அறிமுகமாகினார். தான் புதுக் கணணியொன்று வாங்கியுள்ளதாகவும் அது வேலை செய்ய மறுக்கிறது என்றும் சொல்லி வரக்கட்டளையிட்டார்.

போய் இறங்கினேன்.
திடமாய் கைகுலுக்கி வரவேற்றார். அவர் ஒரு தென்னாபிரிக்க பிரஜை.வயது 60க்கு மேலிருக்கும். ஆனால் வெள்ளைக்காரருமல்ல கறுப்பு நிறத்தவருமல்ல. தங்களை coloured என்று அழைப்பார்கள் என்றும் தாங்கள் மாநிறத்தவர்கள் என்றும் சொன்னார்.

அவரின் கதை பேச்சுகள், அவரின் கருத்துக்கள் உன்பன அவரை ஒரு மேட்டுக்குடி பிரஜை என்றே எனக்குணர்த்தின.

எனது வாழ்க்கையில் அவரைப்போல ஒரு ”கதைப்பெட்டியை” நான் சந்தித்ததில்லை இதற்கு முன்பு. அங்கு நின்றிருந்த 4 மணிநேரமும் திறந்திருக்கும் தண்ணீர்ப் பைப் போல் இருந்தது அவர் வாய். ஓயாமல் பேசிக் கொண்டேயிருந்தார். அவரின் ஆங்கிலம் ரசிக்கத்தக்கதாக இருந்தது. எனினும் தேவைக்கதிகமாகவே கதைத்தார்(கடித்தார்).

தனது நோர்வே வாழ்க்கையை அவர் விரும்பவில்லை என்று தெரிந்தது அவர் பேச்சில். மொழி பிரச்சனையாக இருக்கிறதாம். பெரியவர்களை கனம் பண்ணுகிறார்கள் இல்லையாம். பெண்களுக்கு அதிக சுதந்திரம் கொடுக்கப்பட்டிருப்பதால் குடும்பங்கள் கஸ்டப்படுகிறதாம். ஆனால் தனக்கு அந்த சுதந்திரம் பிடித்திருக்கிறது என்றும் சொன்னார்.

தனது முதல் கணவன் ஒரு இந்தியர் என்றும், தற்போதைய கணவர் நோர்வேஐியர் என்றும் சொன்னார். தனது மகனின் படம் கொணர்ந்து காட்டினார். அழகாய் மிடுக்காய் உடையணிந்திருந்தார் அவர் மகன். மிக அழகானவராகவும் இருந்தார். தனது மகனை நோர்வேக்கு அழைக்க மாட்டார் என்றும், அவன் வந்தால் இங்கிருக்கும் பெண்கள் அவனை கெடுத்துவிடுவார்களாம் என்றார்.

என்னுடன் கதைத்துக்கொண்டிருக்கும் போது தனது தாய்க்கு தொலைபேசினார். ஒரே நேரத்தில் என்னுடனும் தாயுடனும் கதைத்தார். திடீர் என்று தொலைபேசியில் நாய் குரைத்து சத்தம் கேட்டது. உடனே அந்த நாயுடன் கொஞ்சத் தொடங்கிவிட்டார். எனக்கு எல்லாமே புதினமாயிருக்க பட்டணம் பார்த்த கிராமத்தான் மாதிரி ஆஆஆ என்று பார்த்துக் கொண்டிருந்தேன் அவரை.

அத்திலாந்திக் சமுத்திரமும், இந்து சமுத்திரமும் சந்திக்கும் இடத்தி்ல் வாழ்ந்தவர் என்றும், வெள்ளை இனத்தவது ஆட்சி செய்த போது தாங்கள் மிக மகிழ்ச்சியாய் வாழ்ந்திருந்தார்கள் என்றும் கறுப்பு இனத்தவர் ஆட்சிக்கு வந்ததும் தங்களின் மேலுள்ள வெறுப்பால் தங்கள் வாழ்வாதாரங்களை அழித்துவருவதாகவும் சொன்னார்.

கறுப்பினத்தவர்களுக்கு வீதியில் இறங்கி பொல்லு தடிகளுடன் அடாவடித்தனம் செய்யத்தெரியுமே தவிர நாட்டை அபிவிருத்தி செய்யத் தெரியாது என்றும், நாட்டின் சொத்துக்களை அவர்கள் சூறையாடுகிறார்கள் என்பதும் அவரின் கருத்தாயிருந்தது.கறுப்பர்களுக்கு கொள்ளையடிக்கவும், கொலைசெய்யவும் மட்டுமே தெியும் என்றும் தான் ஒரு கிறீஸ்தவ பெண் என்றும் தான் வேதாகமத்தின் போதனைகளை பின்பற்றுபவர் என்றும் வலியுறுத்திச் சொன்னார். எனக்கு மாற்றுக்கருத்துக்கள் இருந்தாலும் கதை கொடுப்பதை தவிர்ப்பதற்காக அமைதியாயிருந்தேன்.

தேத்தண்ணி ஊற்றி மிகச்சிறப்பான முறையில் உபசரித்தார்.அவர் தந்த பிஸ்கட் மிக நன்றாக இருப்பதாக நான் சொல்லி வாயை மூடவில்லை... அது தான் வீட்டில் செய்த பிஸ்கட் எனறும் அதறகு”eat some more”என்று அவர்கள் ஊரில் அழைப்பார்கள் என்றும்,பிஸ்கட் செய்யும் முறையையும் விளக்கமாக சொல்லி ஒரு பிடிபிடித்தார் என்னை.

அவரின் கதையின் அளவு எனது பொறுமையினை சோதித்துக்கொண்டிருக்க அவரோ நான் அவரின் கதையை ரசிக்கிறேன் என்று இன்றும் அதிகமாக கதைத்துக் கொண்டிருந்தார்.

கணவரோ டீவியே கதியாய் இருந்தார். கணவர் பயங்கர படங்களை விரும்பிப் பார்க்கிறாராம் அது தனக்கு பிடிப்பில்லை என்ற போது நீ தான் அவரைத் திருத்த வேண்டும் என்று ஒரு போடு போட்டேன். இனி மேல் தெலைக்காட்சியை நிறுத்தப்போவதாகச் சொன்னார்.
கணணி திரு்தி வீட்டைவிட்டு வெளியேறியபோது எனது காதில் இரத்தம் வழிந்து கொண்டிருப்பது போல் பிரமையேற்பட்டது.

இன்றைய நாளும் ஓரளவு நல்லதே.

.

நடுவிரல் காட்டிய ரோஷக்காரன்

ஊரில் தங்கியிருந்போது சந்த ஒரு ரோஷக்காரன் பற்றிய கதையிது.

பசியெடுத்து ஒரு நல்லதோர் உணவகத்தினுள் புந்து கொண்ட போது நேரம் இரவு 10ஐ தாண்டியிருந்தது. கல்லாவில் இருந்த பெரியவரையும் உள்ளே இருந்த ஒருவரையும் விட வேறு எவருமிருக்கவில்லை.

முட்டைக்கொத்துக்கு ஓடர் கொடுத்தேன். வந்தது.
வேற என்னவும் வேணுமா அய்யா என்றபடி அறிமுகமாகியவரின் கதை தான் இது.
ஒரு சுகர்ப்ரீ கோக் கேட்டேன். இல்லை என்றார். குளிசை இருந்த தைரியத்தில் கோக் குடித்தடிபடியே அவரை இருக்கச் சொன்னே். எட்டி முதளாளியைப் பார்த்து பின்பு வற்புருத்தியதால் உட்கார்ந்தார்.

ஊர், பெயர், தொழில் விசாரித்தார். நானும் விசாரித்தேன். அந்தத் தம்பி ஒரு ரோஷக்காரன் என்பது மட்டும் புரிந்தது.

வீட்டுக் கஸ்டத்தினால் ”டுபாய்” போய் ஒரு நட்சத்திர விடுதியில் சிப்பந்தியாக பணி புரிந்திருக்கிறார். உழைப்பினால் பதிவியுயர்வும் கிடைத்திருக்கிறது. தலைமைச் சிப்பந்தியாய். கையில் காசும் சேர அக்காவுகக்கு கலியாணமும் செய்து வைத்திருக்கிறார். இந்த நேரத்தில் தான் விதி விளையாடியிருக்கிறது ”ரோஷத்தின்” உருவில்.

விடுதிக்கு புதிதாய் ஒரு பெண் குடிவந்தாளாம் ஒரு நாள். 6 மாடியில் தங்க வைக்கப்பட்டிருக்கிறாள். அந்த விடுதியில் ”லிப்ட்” அன்று பழுதடைந்திருக்கிறது. அவளின் அறையை சுத்தம் செய்ய இவர் போக அவள் பிறகு வா என்றிருக்கிறார். இவரும் சற்று நேரத்தின் பின் போக மீண்டும் பிறகு வா என்றிருக்கிறாள் . இப்படி மதியம் வரை நாலைந்து தடவைகள் சொன்ன பின் இவரும் சளைக்காமல் ‌கடைசித் தரம் போன போது மீண்டும் பிறகு வா என்றிருக்கிறாள். தம்பி, நிதானத்தை காற்றில் விட்டு எத்தனை தரம் என்னை அலைக்கழிக்கிறாய் நான் 6 மாடியும் ஏறி இறங்குகிறேன் என்றிருக்கிறார் சற்று சூடாக. அவள் சொன்னால் செய் என்ற போது கொஞ்சமாய் இருந்த நிதானத்தையும் காற்றி விட்ட தம்பி அவளுக்கு நடுவிரலை காட்டிவிட்டு வலு கூலாக திரும்பியிருக்கிறார்.

தான் விரலைக்காட்டியது தலைமை ஊழியரின் கள்ளக் காதலிக்கு என்று அந்தத் தம்பிக்கு புரியும் போது தலைக்கு மேல் வெள்ளம் போயிருந்ததாம். அவளிடம் மன்னிப்புக் கேட்டால் பதவியறக்கத்துடன் முடிந்திருக்குமாம், ஆனால் தான் மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டதாகச் சொன்னார்.

வேலைநீக்கம், விசா ரத்து என்று தொடங்கி 1 மாதத்துக்குள் ஊர் வந்தாராம். வேறு வேலை கிடைக்காததால் இந்த  உணவகத்தில் தொழில் புரிகிறார் என்றார்.

ஏன்டாப்பா உன்ட ரோஷத்தை அடக்கியிருந்திருக்கலாமே என்ற போது... மனிசனை மதிக்காதவனுக்கு என்னத்துக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்று கேட்டார் என்னை?

என்னிடம் பதில் இருக்கவில்லை. ஆனால் அந்தத் தம்பி எனக்கு எதையோ போதித்ததை மட்டும் நன்கு உணர்ந்து கொண்டேன்.

வெளிக்கிட்டபோது தூய்மையாய் சிரித்து வழியனுப்பினார். கைகலுக்கி வெளியில் வந்தேன்.  மனம் நீயென்றால் இப்படிச் செய்வாயா என்று என்னைக் கேள்வி கேட்கத் தொடங்கியிருந்தது.

இன்றைய நாளும் நல்லதே.

.

முகமற்ற எதிரி

 சில நாட்களுக்கு முன் ஒரு இன்டர்நெட் கபேயில் கணணிதிருத்திக் கொணடிருக்கும் போது ”உதவி செய்யமுடியுமா” என கேட்டபடியே அறிமுகமாகிய ஒரு ஈரான் நாட்டுப் பெண்ணின் பரிதாபமான கதைதான் இது.

நான் இருந்த அவசரத்திலும் அப் பெண்ணின் அரைகுறை நோர்வேஐிய மொழியினாலும் அவளின் அவசரத்தை பிழையாகப் புரிந்து கொண்டேன் அன்று. ஆகையால் நாளை பகல் தொலைபேசு என்று சொல்லி எனது வேலையைத் தொடர்ந்தேன். அவளின் தயவு செய்து ”உதவிசெய்” என்பது கூட எனது அவசரஉலகத்தில் அடிபட்டுப்போனது. அதை மறந்தும் போனேன் அடுத்துவந்த நிமிடங்களில்.

அடுத்தநாள் பகல் தொலேபேசியில் ”நான்தான் நேற்று உதவிகேட்டவள்” என்று அறிமுகமானாள் மீண்டும், அதே பெண்.  அப்பொழுதும் எனது அவசரத்தில் அடிபட்டுப்போனது அவள் அவசரம். நாளை மதியம் பார்ப்போம் என்றேன். தயவுசெய்து உதவிசெய் என்றாள் மீண்டும், கெஞ்சும் குரலில். அவள் குரலின் உருக்கமும், சோகமும் என்னை  ஏதோ செய்ய நாளை கட்டாயம் வருகிறேன் என்றேன்.

அடுத்தநாள் குறிப்பிட்ட நேரத்திற்கு அதே இன்டர்நெட் கபேயில் சந்தித்தோம். அப்போது தான் அவளை நன்றாகக் கவனித்தேன். வயது 40க்கு அதிகமாயிருக்கும். பாரசீகத்து பெண்களுக்குரிய நிறத்துடன் பார்த்தால் தைரியசாலியான பெண் போலத் தெரிந்தாள். ஆனால் கண்களில் ஏதோவொரு பதட்டம் தெரிந்தது.

என்ன உதவி வேண்டும் என்றேன். சொன்னாள் இப்படி:
தன்னைப்பற்றியும் தனது குழந்தைகளைப் பற்றியும் youtube இல் ஒருவன் தாறுமாறாக வீடியோ செய்தி எழுதியிருப்பதாகவும், அதை தனது கணவரோ அல்லது குடும்பத்தாரோ பார்க்க முதல் அழிக்கவேண்டும் என்றும்.

எனக்கு மெதுவாய் புரியத் தொடங்கியது அவளின் பதட்டத்துக்கான காரணம். ‌அவள் ஈரான் நாட்டு chat room ஒன்றில் தனது கருத்துக்களை பயமின்றி பகிர்ந்திருக்கிறாள். சில வேளைகளில் சிலருடன் உரையாடியுமிருக்கிறாள். அந்தச் சிலரில் யாரோ ஒருவர் இவளுடைய நட்புவட்டத்தில்லிருந்திருக்கிறான். அவன் மூலமாக நோர்வேயில் உள்ள இவளைப்பற்றிய தகவல்கள், ஈரானிலுள்ள அவளின் குடும்பத்தாரின் விபரங்கள் இவளின் கருத்துக்களை ஜீரணிக்கமுடியாதவர்களுடம் போயிருக்கிறது, அவர்கள் வீடியோவை வெளியிட்டு இவளை மிரட்ட, இவள் அதை அழிக்க என்னிடம் வந்திருக்கிறாள்.

நீ நினைப்பது போல் இலகுவான காரியமில்லை அது என்று விளக்கிக் கூறினேன். இதை அழிப்பதாயின் நீ அதற்கு விண்ணப்பிக்கவேண்டும் என்றும். அதை பரிசீலீப்பவர்கள் அது உனது சுயஉரிமையை மீறுவதாக இருந்தால் அதை அகற்றுவார்கள் என்றும், அதற்கு பல மாதங்கலாகலாம் என்றும், சில வேளைகளில் இந்த வீடியோவை பிரதியெடுத்து வேறு தளங்களில் வெளியிட்டிருக்கவும் சந்தர்ப்பம்  உண்டு என்றும் சொன்னேன்.

தலையில் கைவைத்து தனது மொழியில் ஏதோ அரற்றியபடியிருந்தாள். சற்று அமைதியானபின் அவளுக்கென்று youtube இல் பயனர் கணக்கு தொடங்கி, அந்த வீடியோ இவளின் சுய உரிமையை மீறுகிறது என விளக்கமாக எழுதி, இந்த வீடியோவை அகற்றுமாறு இருவிதமான விண்ணப்பங்கள் அனுப்பினோம்.

நாளை பதில் வருமா? என்று சிறுபிள்ளையாய் மாறி கேட்ட போது பரிதாபமாயிருந்தது, எனக்கு. அவ்வளவு இலகுவல்ல இது என்றேன் மீண்டும். இயலாமையின் வேதனை தெரிந்தது அவளின் முகத்தில்.

தன்னால் குடும்பமானத்திற்கு பங்கம் வந்திருப்பதாக கணவனும், குடும்பத்தாரும் நினைப்பார்கள் என்றும் அதன் பாரதூரம் தன் வா‌ழ்வையும் தனது குழந்தைகளின் வாழ்வையும் பாதிக்கும் என்றும், தான் குடும்பத்தில் இருந்து ஒதுக்கப்பட்டுவிடவும் சந்தர்ப்பம் உண்டு என்றும் சொன்னாள்.

உள்ளூர் போலிசுக்கு போய் விபரத்தைச் சொல்லி உதவி கேள் என்றும் சொல்லி, என்னால் முடிந்தது இது தான் என்றும் சொன்னேன்

நீ எனது சகோதரன் என்று சொல்லி விடைபெற்றுப் போனார்.
அவர் நடையில் அவர் மனதின் பாரம் தெரிந்தது.

விதி வலியது.

வழமைபோல் ”இன்றைய நாளும் நல்லதே” என்று என்னால் இன்று எழுத முடியவில்லை.

.

எரிந்து, கனத்திருக்கும் மனது

 இன்றும் கணணி திருத்தப்போய் சந்தித்த ஒரு மனிதரின் கதையைத் தான் எழுத நினைத்திருக்கிறேன்.

ஒஸ்லோவின் செல்வச்செழிப்புள்ள புறநகர்ப்பகுதியில் உள்ள ஒரு தொடர்மாடியில் குடியிருந்தார் அப் பெண். ஒப்பந்தம் செய்து கொண்டபடி காலை 10 மணிக்கு அவரின் தொடர்மாடி அழைப்பு மணியை அழுத்தினேன். வீடியோவில் என்னைப் பார்த்து, பின்பு கதவைத் திறந்தார். மூன்றாம் மாடியில் கதவருகே நின்று வரவேற்றார். வயது 70 - 75 இருக்கும்.

வீ்டு மிக நேர்த்தியாக ப‌ழங்கால பொருட்களினால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. சுவரெங்கும் பெருதும், சிறுதுமாய் கலைச்சித்திரங்கள் தொங்கவிடப்பட்டிருந்தன. மதுபான குடுக்கைகள் ஓரிடத்தில் பலநிறங்களிலும் பல அளவுகளிலும் யாருக்காகவோ காத்திருந்தன.

காட்டப்பட்ட இடத்தில் கணணி இருந்தது. பிரச்சனையை விளக்கினார். நானும் வேலையை தொடங்கியபடியே கதைத்துக்கொண்டிருந்தேன். எமது பேச்சு குடும்பம் பக்கம் திரும்பியது. எனது குழந்தைகள் பற்றிக்கேட்டார். சொன்னேன். பதிலுக்கு நானும கேட்டேன் பலத்த மெளனத்தை பதிலாகத் தந்தார். மனம் எதையோ எச்சரிக்கை செய்ய நானும் மெளனித்திருந்தேன்.

நாம் இருந்த அறை எமது மெளனத்தின் கனத்தை உணர்ந்துகொண்டிருந்தது. நானும் அதையே உணர்ந்தேன். சற்று நேரத்தின் பின் தனக்கு இரு பிள்ளைகள் எனவும் அதில் ஒருவர் என்று சொல்லி மெளனமானார். கண்களைத் துடைத்தவர் தொடந்தார். மூத்தவள் மகள் என்றும் மற்றவர் மகன் என்றார். மகன் ஒஸ்லோவில் வாழ்வதாயும், மகள் என்று சொல்ல வந்தவர் உடைந்த குரலில் பேசக் கஸ்டப்பட்டார். பின்பு மகள் இறந்து விட்டதாகவும் அவரை யாரோ கொலைசெய்து ஒரு குளத்தில் வீசியிருந்ததாகவும் சொல்லிமுடிக்க முதலே கண்ணீர் வழிந்தோடிக்கொண்டிருந்தது.

மகள் பெரியதொரு நிறுவனத்தில் சிறந்த பதவியில் இருந்ததாகவும். வருடத்தில் அதிகமான நாட்கள் வெளிநாடுகளுக்கு பறந்து கொண்டிருப்பாள் என்றும், அது தன்னை பயங்கொள்ள வைத்ததாயும், அது பற்றி பேசியபோது இனிமேல் தான் சைப்பிரஸ் நாட்டில் ஒரு வருடம் வாழப்போவதாக சொல்லிச் சொன்றவர் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டதாகவும் சொன்னார். மகளின் மரணத்தை உள்ளூர் போலீசார் தற்கொலை என மூடிமறைத்ததாகவும் ஆனால் பிரேதபரிசோதனை நீரில் மூழ்கியதால் ஏற்பட்ட மரணம் என்பதை மறுதலிக்கிறது என்றும் கொன்னார். லஞ்சம் விளையாடியிருப்பதை தான் நன்கு உணர்வதாயும், குற்றவாளி தண்டிக்கப்படாது தனது மகள் தண்டிக்கப்பட்டிருப்பது எவ்விதத்திலும் நியாயமில்லை என்றார் உடைந்த குரலில்.


குழந்தையின் நிரந்தரப்பிரிவு அவரை பெரிதாய் பாதித்திருந்தது. தனக்குள் ஒரு உலகத்தை உருவாக்கி வாழ்வதாயும், வாழ்க்கையில் பிடிப்பே இல்லை என்றும் சொன்னார். எனக்கு ஏதும் பேச வரவில்லை, எனினும் அவரின் வேதனையைப் புரிந்து கொள்ள முடிந்தது. மெளனமாய் இருந்திருந்தேன்.

அவரின் கைத்தொலைபேசியில், கணணியில், வீட்டில் பல இடங்களில் மகளின் படங்கள் இருந்தன. கைத்தொலைபேசியில் இருந்த படத்தை மெதுவாய்த் தடவிக் கொடுத்தார்.

வேலைமுடிந்து வெளியேறும் போது எனக்கு எத்தனை வயது என்றார். 45 என்ற போது எனது மகளுக்கும் இந்த வருடம் 45 வயதாகியிருக்கும் அவள் இருந்திருந்தால் என்றார்.

எனக்கு ஏதோ புரிந்தது போல இருந்தது ...

இன்றைய நாளும் நல்லதே


.