பல்லு போயிரிச்ய்யா போயிரிச்சி...

நேற்றுக் காலை வேலை நோக்கி நடந்து வந்து கொண்டிருக்கும் போது ”ட்ராம்ப்” வண்டிக்காக காத்திருக்க நேர்ந்தது. அருகில் முகத்தில் சந்தோசத்தையும் முதுகில் பையையும் சுமந்தபடி முதலாம் வகுப்புப் பிள்ளைகள் பலர் நின்றிருந்தனர். காலைக் குளிரின் கடுமையோ, தூக்கத்தின் களைப்போ எதுமே அவர்களிடத்தில் இல்லை. காலையில் பூத்த புது மலர்களாய் நறுமனத்துடன் நின்றிருந்தார்கள். அவர்களின் மகிழ்ச்சி என்னையும் தொற்றிக்கொண்டது. ட்ரம்ப் வர ஏறி உட்கார்ந்து கொண்டேன். அவர்களின் ஆசிரிகைகள் இவர்களை எண்ணி எண்ணி ட்ராம்ப் வண்டியினுள் ஏற்றிக் கொண்டிருந்தார்கள்.  உள்ளே ஏறியதும் எனது ஆசனத்தை சுற்றியும் நின்று கொண்டார்கள்.

அருகில் இருந்த ஒரு சிறுமிக்கு ஆசனததைக் கொடுத்தேன். நன்றி என்று  வாயாலும், கண்ணாலும், முகத்தாலும் சிரித்தாள். தான் இருந்த பின் நண்பிக்கும் இடம் ஒதுக்கினாள். ஒரு ஆசனத்தில் இருவர் இருந்து கொண்டனர். ட்ராம்ப் வண்டி முழுவதும் அவர்க‌ளே வியாபித்திருந்தார்கள். உள்ளே இருந்த காற்றுக் கூட அழககாய் இருந்திருக்கும். அத்தனை மகிழ்ச்சியாய் உலகை மறந்து நின்றிருந்தார்கள் அவர்கள்.

அருகில் இருந்த சிறுமி நண்பியிடம்
“நேற்று மாலை எனது முதல் பல்லு விழுந்தது“  காலை 20 குறோணர்கள் கிடைத்தது என்றாள் (நோர்வேயில் பல்லு விழுந்தால் அதை ஒரு கிளாஸ் இல் போட்டு வைப்பார்கள், இரவு பெற்றோர் அந்த பல்லை எடுத்து விட்டு காசு போடுவது வழக்கம்)
“காட்டு பார்ப்போம்“ என்றாள்
ஈஈஈஈ என்று பல்லைக் காட்டுகிறாள், பல்லை இழந்தவள்.
முத்து முத்தான பல்வ‌ரிசையில் ஒரு முத்தைக் காணவில்லை. அந்த இடைவெளிக்குள்ளால்  நாக்கை விட்டுக் காட்டி சிரித்தாள். மற்றவளும் சிரித்தாள்.
இப்போ அருகில் இருந்த சிறுவர்கள் இருவரும் தங்களுக்கும் பல் இல்லை என்று பற் வரிசையை காட்ட மற்ற சிறுவன் 1,2,3 என்று இல்லாத பற்களை எண்ணினான். பல் விழுவது அவர்களுக்கு பெருமையாய் இருந்தது. குழந்தைக் காலத்தை கடந்து வளர்ந்து விட்ட சந்தோசம் அவர்களுக்கு. அவர்களைத் தொடர்ந்து சற்று நேரத்தில் ஏறத்தாள எல்லா குழந்தைகளும் தங்கள் பல்லைப் பற்றியோ அல்லது  அருகில் இருந்தவரைப் பற்றியோ பெசிக் கொண்டிருந்தார்கள்.

என்னருகில் இருந்த சிறுமி அருகில் இருந்த இளம் ஆசிரியையிடம் உனக்கு எத்தனை பல்லு விழுந்திருக்கிறது என்றாள். அவரோ இதுவரை ஒன்றும் விழவில்லை என்ற போது அழகிய அவளின் கண்கள் ஆச்சர்யத்தால் விரிந்தது.
“உண்மையாகவா“
“ம்“
“வாயைத் திற“
ஆஆஆஆஆ
அவரின் வாய்க்குள் இவள் எட்டிப்பார்க்க மற்ற குழந்தைகளும் எட்டிப்பார்த்தார்கள்
ஆசிரியர் நான் சிறுமியாய் இருந்போது எல்லா பற்களும் விழுந்து முளைத்தன என்றார்.
“எத்தனை வயதில் விழுந்தது?“
“7 -9“ வயது வரை
“எல்லா பல்லும் விழுந்திருந்த போது எப்படி உணவு உண்டாய்“
“ஒரே நேரத்தில் எல்லா பற்களும் விழ மாட்டாது, எனவே நீ பயப்படத் தேவை இல்லை“ என்றார்

என்னையறியாமல் நான் எனது வாய்க்குள் ஏதும் பல்லு விழுந்த ஓட்டை இருக்கிறதா என நாக்கால் தடவிப் பார்த்தேன். கொடுப்புப்பல் ஒ்ன்று எனது வாய் நாற்றம் தாங்காமல் பல வருங்களுக்கு முன்பே விடைபெற்றறு ஞாபகம் வந்தது. சில வருடங்களுக்கு முன்  ஞானப்பல் என்றதும் வலியைத் தர அதையும் புடுங்கி எறிந்து, 1500 குறோணர்களையும் புடுங்கிக் கொண்டார் பல் வைத்தியர். (அப்ப உனக்கு ஞானமில்லையை என்று நீங்க கேக்கப்படாது ... ஆமா). எனக்கும் இன்னும் சில வருடங்களில் மீண்டும் பல்விழும் காலம் ஆரம்பிக்கப் போகிறது. அப்போதெல்லாம் இக் கிழந்தைகளை போல் பெருமைப்படமாட்டேன் என்பது மட்டும் நிட்சயம். பொக்கை வாயால் பீடா சாப்பிடும் காலம் வருமா... அய்யோ .. நினைக்கவெ பயமாகவிருக்கிறது. வந்தாலும் இருக்கவே இருக்கிறார் டாக்டர் பாலாஜி, சென்னையில். மீண்டும் என்னை ”யூத்” ஆக்கிவிடுவாராமுள!

அணிலே அணிலே இந்தப் பல்லை எடுத்துக் கொண்டு உன்ட பல்லைத் தா என்று வீட்டின் கூரைக்கு மேல் பல்லெறிந்ததும், ஆடிய பல்லை பல்லால் தட்டி தட்டி விழவைத்ததும், வந்த ரத்தத்தை துப்பி துப்பி நண்பர்ளிடம் பந்தாவாக காட்டித் திரிந்ததும், பல் விளக்கும் போது உமிக்கரி பல் விழுந்த காயத்தில் குத்தி வலித்ததும் எங்கோ தொலைவில் மெல்லிய நினைவின் நறுமணத்துடன் மனதை நனைக்க ட்ராம் வண்டியால் இறங்கி நடக்கத் தொடங்கினேன்.

ட்ராம்ப் வண்டியின் ஜ்ன்னலில் இருந்த சிறுவர்கள் இற்ங்கிய எல்லோருக்கும் கை காட்டிக் கொண்டிந்தார்கள். என் கையும் என்னைக் கேட்காமலே மேலுயர்ந்து ஆடியது.


இன்றைய நாளும் நல்லதே!


.

நியூட்டனின் ”(தலை)விதியும்” திருவள்ளுவனும். சந்தேகங்கள்...

சில நாட்களாகவே ஒருவரின் செயலால் மனம் தேவைக்கு அதிகமாகவே எரிச்சலில் இருக்கிறது. சரி.. அது பற்றி திருக்குறள் என்ன சொல்கிறது என்று இணையத்துக்குள் புகுந்து தேடத் தொடங்கினேன். நான் தேடியதற்கு பதில் இருந்தது இப்படி:

ஈன்றாள் பசிகாண்பான் ஆயினும் செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை (குறள் 656)


அதாவது பெற்ற தாயின் பசியைக் கண்டு வருந்த நேர்ந்தாலும், சான்றோர் பழிப்பதற்குக் காரணமான இழிவுற்ற செயல்களை ஒருவன் செய்யக் கூடாது என்கிறார்.

பொருத்தமாகத் தான் எழுதியிருந்தார்  திருவள்ளுவர். 

அதை வாசித்த பின்,  வேறு சில குறள்களையும்  அதற்கான  உரைகளையும்
கடந்து போய்க்கொண்டிருக்கும் போது  இந்தக் குறளும், உரையும் கண்ணில் பட்டது:

அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார் அஃதறி கல்லா தவர் (குறள் 427)

உரை:ஒரு விளைவுக்கு எதிர் விளைவு எப்படியிருக்குமென அறிவுடையவர்கள்தான் சிந்திப்பார்கள்; அறிவில்லாதவர்கள் சிந்திக்க மாட்டார்கள்.

இதை வாசித்தவுடன் மனதுக்குள் ஒரு சிறு குழப்பம் வந்தது. அதைத்தான் உங்களிடம் பகிர்ந்து கொள்ள நினைத்திருக்கிறேன். உங்களின் கருத்துக்கள் எனது குழப்பத்தை தீர்க்கலாம்.

உங்களுக்கு நியூட்டனின் 3ம் விதி நினைவிருக்கிறதா? இல்லை என்றால் அது இப்படிக் கூறுகிறது ஒவ்வொரு விசைக்கும் அதற்கு சமமான எதிர்விசை இருக்கும்.

எனக்கேதோ வள்ளுவரின் குறளுக்கும் நியூட்டனின் விதிக்கும் நெருங்கிய தொடர்புள்ளதாகவே தெரிகிறது. வள்ளுவர் விஞ்ஞான ரீதியாக தர்க்கிக்காவிட்டாலும் மெய்ஞான ரீதியாக நியூட்டனின் விதியை அலசுகிறார் என்கிறது எனது மனம். ஒன்றை அலசுவதாயின் அனுபற்றி பலத்த அறிவு வேண்டியிருக்கிறது. இருவரும் ஒரே கருத்தை இருவேறு விதமாகப் பார்க்கிறார்கள். ஒன்று விஞ்ஞான ரீதியாக, மற்றொன்று மெய்ஞான ரீதியாக.

நியூட்டன் 1600ம் காலத்து மனிதர். திருவள்ளுவரோ கி.மு. முதல் நூற்றாண்டு மனிதர். ஏறக்குறைய 1700 வருட வேறுபாடு இருக்கிறது இவர்களுக்கிடையில். இவர்கள் இருவரைத் தவிர வேறு எவரும் இவைபற்றி பேசியதாக என் சிற்றறிவுக்கு தென்படவில்லை. அப்படி ஏதும் இருந்தாலும் அவை கி.மு. முதல் நூற்றாண்டுக்கு முற்பட்டதாக இருக்குமா என்பதும் சந்தேகமே.

எனவே விசை யற்றிய அறிவு திருவள்ளுவனிடம் இருந்தே நியூட்டனுக்கு வந்திருக்கலாம் என்று நாம் தர்க்கிக்கலாமா?

இங்கு, விசையை மெய்ஞானத்திலும், விஞ்ஞானத்திலும் நாம் காண்கிறோம். அப்படியாயின் மெய்ஞானத்திற்கும், விஞ்ஞானத்திற்குமான வேறுபாடு என்ன?

குசும்புக்காக இக் கேள்விகள் கேட்கப்படவில்லை என்பதை கற்பூரமடித்து  சத்தியம் செய்கிறேன். இனிமேல் தான் மெய்ஞர்னத்தைப் பற்றி நான் அறிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. அதற்காக எனக்கு விஞ்ஞானம் தெரிந்ததாக நீங்கள் நினைக்கவும் கூடாது.

தேடலே வாழ்வாகிறது....

பதிலை எதிர் பார்க்கிறேன்.


.

தீராத குதூகலங்கள்

இன்று காலை நிலக்கீழ் புகையிரதத்தை நோக்கி நடந்து கொண்டிருந்தேன். முகத்தில் சூரியனின் இளம் சூடு பட மனமெல்லாம் கூதூகலமாய் இருக்க, ‌ வீதியோரத்து பனி உருகி ஓடிக்கொண்டிருந்தது. மெதுவாய் நிலக்கீழ் புகையிரதப் நிலையத்துப் படிக்கட்டுகளில் இறங்கிக் கொண்டிருந்தேன்.

படிகள் முடியுமிடத்தில் ஒரு ஒரத்தில் ஒரு எலிப் பொம்மையொன்று எடுத்து வைக்கப்பட்டிருந்தது. யாரோ ஒரு குழந்தை தவறவிட்டதை யாரோ ஒருவர் எடுத்து கவனமாக கண்ணில் படும்படியாக அந்த ஓரத்தில் வைத்திருந்தார். அருகில் போய் அதைப் பார்த்தேன். மிகவும் அன்பாய் அதை பாவித்திருப்பது அதன் பாவனையில் தெரிந்தது. அது புதிய பொம்மையல்ல. சிலகாலங்கள் அன்பாய் அணைக்கப்பட்டிருந்ததற்கான அடையாளங்கள் தெரிந்தன.  அதைத் தொலைத்த குழந்தை என்ன பாட்டைப் படுகிறதோ.. அதை விட அக் குழந்தையின் பெற்றோர் படும்பாட்டை நினைத்துப் பார்த்தேன். வயிற்றுக்குள் ஏதோ பிசைந்தது.

என் தம்பியின் மகளிடமும் இப்படியான முயல் போன்ற தோற்றத்துடனான ஒரு பொம்மை இருக்கிறது. ”சின்னமீ” என்று அதற்கு பெயரிட்டிருக்கிறாள். அதை எனது மகள்கள் அவளுக்கு பல வருடங்களுக்கு முன் கொடுத்தார்கள். அப்போ அவளுக்கு 2 -3 வயதிருக்கலாம்.  தற்போது 8 வயதாகிறது அவளுக்கு அன்றில் இருந்து அந்த ”சின்னமீ” இல்லாமல் அவள் இல்லை. அவள் இல்லாமல் ”சின்னமீ” இல்லை.

ஒரு முறை எங்கோ போய் வரும் போது  துக்கக் கலக்கத்தில் ”சின்னமீ” வீதியோரத்தில் விழுந்துவிட்டது. அவளும் கவனிக்கவில்லை. ”சின்னமீ யும் சத்தம் போடவில்லை.  வீடு வந்து சேர்ந்ததும் ”சின்னமீ யை காணவில்லை என்ற அழுது ஆர்ப்பாட்டம் பண்ண... அவளின் அப்பா தனது விதியை நொந்தபடியே வந்த வழியே நடந்து போக ”சின்னமீ” மழையில் நனைந்து, வீதி அசுத்தத்தில் ஊறி  உரு மாறியிருந்திருந்த போது அதை மீட்டு, முதலுதவி செய்து மகளிடம் ஒப்படைத்தபின்பே அவள் அடங்கினாள் என பின்பொரு நாள் அறியக் கிடைத்தது.

அவளுக்கு ஒரு தம்பி பிறக்கும் வரை ”சின்னமீ”க்கும் அவளுக்கும் பிரச்சனை வந்ததில்லை. தம்பி பிறந்து அவனுக்கு ”சின்னமீ” மீது ஆசை  வந்ததால் உரிமைப் பிரச்சனை வந்திருக்கிறது. ”சின்னமீ” என்னுடையது என்கிறான் அவன். இல்லை என்னுடையது என்கிறாள் இவள். அவர்களின் சண்டையை மௌனமாய்  பார்த்தபடியே என்னை இழுத்துக் கிழித்துவிடாதீர்கள் என்கிறது ”சின்னமீ”. எனக்கும்  அவர்கள் ”சின்னமீ” ஐ இழுக்கும்  போது மனம் திக் திக் என்றிருக்கிறது. ”சின்னமீ” யின் கை, கால் களன்றுவிட்டால் என்ற பயம் தான்.

தன் தம்பி நித்திரைக்குப் போகும் போது அழுது ஆர்ப்பாட்டம் பண்ணிணால் மட்டும் ”சின்னமீ யை அவனிடம் கொடுப்பாள்.  இவளுக்கு நித்திரை வந்தால் மெதுவாய் தம்பியிடம் போய் அதை எடுத்து வந்து ”சின்னமீ யை முக்கினருகே வைத்தபடியே தூங்கிப் போகிறாள். தம்பி இவளுக்கு முன் எழும்பியவுடன் மெதுவாய் ”சின்னமீ யை கடத்தி வருகிறான்.  இப்படி தான் கடத்தப்படுவதையும், மீட்கப்படுவதையும் ”சின்னமீ” மட்டும் ரசித்துக்கொண்டிருப்பதாகவே எனக்குப் படுகிறது.
 
”சின்னமீ” மிகவும் குண்டாகவும், அழகாவும் இருந்திருந்தது பல வருங்களுக்கு முன்.  தற்போது மிகவும் நலிந்திருக்கிறது. ஆனால் தற்போதைய அழகு ”சின்னமீ” க்கு உயிர் கொடுத்திருக்கிறது என்பேன் நான். அதன் கை, கால்களும் ஆங்காங்கு கிழியத் தொடங்கியிருக்கிறது. என்றோ ஒரு நாள் ”சின்னமீ ” யின்  அவயங்கள் கிழியப் போகின்றன என்று புரிகிறது. அந்த நாளை மிகவும் பயத்துடன் எதிர்பார்த்திருப்பார்கள் எனது தம்பி வீட்டார், என்பது மட்டும் நிட்சயம். அந்த நாள் எல்லோருக்கும் வலி மிகுந்ததாய் இருக்கும். ”சின்னமீ”க்கும் கூட.

இப்படித்தான் எனது  எனது 45 வது பிறந்தநாளுக்கு எனக்கொரு கரடிப்பொம்மை வாங்கித் தந்தாள் எனது இளைய இளவரசி. (கரடிக்கு குளிர்காலத்து உடை, சப்பாத்து, கண்ணாடி வாங்க வேண்டும் என்றுமிருக்கிறாள். அதற்கும் தலையாட்டியிருக்கிறேன் வழமை போல்).

அந்தக் கரடியை என் தலையணைக்கருகில் வைக்க உத்தரவு வந்தது. வைத்திருக்கிறேன். தினமும் அதனுடன் பேச வேண்டும் என்றாள். பேசிக்கொள்வேன். (என்ன மொழியில் பேசுகிறேன் என்று நீங்கள் கேட்கப்படாது.. ஆமா). கரடியும் இன்னொரு மிருகத்துடன் இருப்பதாலோ என்னவோ பிரச்சனை தராமல் இருக்கிறது. அந்தக் கரடியில் இளையமகளின் வாசனை இருப்பது போல் இருக்கிறது எனக்கு. பூவினும் மென்மையான வாசனை அது.  தினமும் அதை தடவிக்கொடுத்த பின்பே தூங்கிப்போகிறேன். பல இடைவெளிகளை ஏதோ ஒருவகையில் நிரப்புகிறது அந்தக் கரடிப் பொம்மை.

கிழண்டுபோயிருக்கும் எனக்கே பொம்மையின் அருகாமை அவசியமாயும், ஆறுதலாயும் இருக்கும் போது பச்சைக் குழந்தைகள் தங்கள் பொம்மைகள் இன்றி தூங்க மறுப்பதில் தவறென்ன இருக்கிறது.

அல்லது நான் தான் இன்னும் குழந்தை என்னும் நிலையை கடந்து வராதிருக்கிறேனோ?  அப்படியும் இருக்கலாம். அது உண்மையாய் இருக்கவேண்டும் என விரும்புகிறேன்.


இன்றைய நாளும் நல்லதே!

எனது நெருங்கிய நண்பர் Mr. Been அவர்களிடமும் கரடிப் பொம்மை இருக்கிறது. பார்க்க http://www.youtube.com/watch?v=2ajUewCO6zQ&feature=fvsr



.

தற்கொலைக்கு உதவிய நான்

 ”எதிர்” (http://ethir.org) இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட எனது ஆக்கம்.

ரோப்பிய நகரமொன்றின் பிரபல நிலக்கீழ் சுரங்க ரயில் நிலையத்துக்கு அருகில் உள்ள சொப்பிங் சென்டரால் ஏதோ நினைத்தபடி வெளியேறிக் கொண்டிருந்தேன். வெளியே குளிர் குளிர்ந்து கொண்டிருந்தது.
வாசலால் வெளியேறிய என்னைப் பார்த்த ஒருவர் ”அலைக்கும் அஸ்லாம், அலைக்கும் அஸ்லாம்” என்றபடி ஓடி வந்தார். தெரிந்தவராயிருக்குமோ அல்லது கடன் தந்த அப்பாவியோ என்று பலமாய் சிந்தனையோட அவரைப் பார்த்தபடியே நின்றிருந்தேன்.

அருகில் வந்தார். ”யூ ஆர் ப்ரொம் பாக்கிஸ்தான் ?”  என்றார். ஏன் என்னை மட்டும் இவர்களுக்கு சோமாலியனாகவும், எரித்திரியனாகவும், இப்ப பாகிஸ்தானியாகவும் தெரிகிறது. வந்த எரிச்சலை அடக்கிக் கொண்டு மெளனமாய் நின்றிருந்தேன்.
”ஸ்பீக் இங்கிலீஸ்”
ஆம் /இல்லை என்பது போல் என் தலை சற்று மேலும் கீழுமாய் ஆட, சுற்றாடலைக் கவனித்தேன். இந் நாட்களில் இந்த நகரத்தில் ஒருவர் கதைகொடுக்க மற்றவர்கள் சேர்ந்து வந்து கொள்ளையடிப்பதாக கதை உலாவுகிறது என்பதனால்.

நம்மிடம் என்ன இருக்கு கொள்ளையடிக்க என்று நினைத்துப் பார்த்தேன். பையினுள் தண்ணீர் போத்தலும், ஒரு புத்தகமும் மட்டுமே இருந்தது. காசும் கையில் இருக்கவில்லை. நானும் செக்சியாய் இல்லை. எனவே பாதகமில்லை என்பதால் தைரியம் வந்தது.

இப்பொழுது  அவர், பக்கத்து வீட்டு முருங்கை எங்கள் வீட்டுக்குள் சாய்ந்திருந்தால் அது எங்களுடையது என்பது போல சிவனே என்று தொங்கிக் கொண்டிருந்த எனது கையை எனது அனுமதி இன்றி  இழுத்துக் குலுக்கிக் கொண்டிருந்தார். நானும் சுற்றாடல் பாதுகாப்பாய் இருந்ததனால் வலுக்கட்டாயமாக சிரிப்பை அழைத்து வந்து முகத்தில் இருத்தி சிரித்தேன்.

”ஐ நீட் புவர் போன்” என்றார்”
”தர ஏலாது அது என்னுடையது” என்று சொல்ல யோசித்தேன்.. அதற்கு முதல் அவரே இப்படிச் சொன்னார்.

ஐ மரி டுமோரோ
எனது மனமோ… அட பாவமே… தற்கொலை செய்யப்போகிறேன் என்று இவ்வளவு ஆறுதலாக சொல்கிறானே என்று அவனில் அனுதாபப்பட தொடங்கியிருக்க… என்னை அருகில் இருந்த பூக்கடைக்கு அழைத்துப் போய் ஒரு பூங்கொத்தை காட்டி.
”டூ மை லேடி” என்றான் நீங்க ரொம்ப அப்பாவிண்ணே என்று வடிவேலு குரலில் சொல்ல வேண்டும் போலிருந்தது எனக்கு
”ப்ரெண்ட்…. ஐ நீட் கோல் மை லேடிஇ அன்ட் ஆஸ்க் திஸ் கலர் ஓகேஇ பட் ஐ நோ போன்” என்றதும் .. ஒன்றையும் ஒன்றையும் கூட்டிப் பார்த்தேன். . இப்படி விளங்கியது.

அவர் எதிர்கால மனைவியிடம் பூங்கொத்தின் நிறம் பற்றி உரையாட விரும்புகிறார் ஆனால் அவரிடம் தொலைபேசி இல்லை என்பதால் என்னிடம் கேட்கிறார்.

தற்கொலைக்கு தயாராகவிருக்கிறான்  அவன். என்னாலான சிறு உதவியை செய்யாவிட்டால் நானும் மனிசனா என்று நாளைக்கு எனது மனம் என்னைக் கேள்விகேட்கக் கூடாதென்பதற்காக  இந்தா  வேண்டுமான அளவு கதைத்துக்கொள். இது தான் நீ உனது வாழ்வில் கடைசியாக சுதந்திரமாக உலாவும் நாள் என்று நினைத்தபடியே போனை நீட்டீனேன்.

படுபாவி....... போனில் கொஞ்சுகிறான்… கெஞ்சுகிறான், கெஞ்சுகிறான்.. அவள் மிஞ்சுிகறாள்.. இவன் அஞ்சுகிறான்…  ஆண்வர்க்கத்தையே அடகுவைத்துவிட்டான் பாவி .. அந்த 5 நிமிடத்துக்குள்.

ஒரு பைத்தியத்தைப்போல் 15 நிமிடங்கள் போல் அவ்விடத்தில் காவலிருந்தேன். டெலிபோனை எடுத்துக் கொண்டு ஓடிவிடுவானோ என்பதால் கடையின் வாசலி்ல் நின்று கொண்டேன். அப்படி அவன் ஓடினால் கால் தடம் போட்டு விழுத்துவதாகவும் புலனாய்வுத்துறை சொல்லியது எனக்கு.

பூக்கடைக்காறி..  இவனின் அவசரம் புரிந்ததால் வாடிய பூவையும் அவனின் பூங்கொத்துக்குள் சொருகியபடியே இவனைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தாள்.  இவன் தனது தன்மானம் எல்லாவற்றையும் இழந்து தொ‌லைபேசிக் கட்டளைகள் எல்லாவற்றிற்கும் தலையாட்டிக்கொண்டிருந்தான்… அவனைப் பார்த்தால் வேள்விக்கு போகும்   (ஸ்..ஸ்  சத்தம் போடாதீங்க) போலிருந்தது.

வாடிய,வாடாத பூக்களுடன் நாளைய மனைவியின் பூங்கொத்து ரெடியாகியது.  அடுத்தது தற்கொலையங்கிக்கான ரோஜாப்பூவின் நிறம் பற்றி கதைக்க ஆரம்பித்தான். அது மஞ்சள் நிறம் என கட்டளையதிகாரி  கூற, வாயால் வந்த லிங்கத்தை பெற்ற பக்தன் போல அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டான். எனக்கு அந்த நிறம் கண்றாவியாய் இருந்தது.

மீண்டும் ஏதோ  புரிதாத பாசையில் சொல்லி பலமாய் சிரித்தான். ஒரு வேளை… அழகிய ராட்சசியே..!  எனக்கு ஒரு ‌ கறுப்புச் சனியன் ஓசியில போன தந்திட்டு கேனயன்  கணக்கா நிற்கிறான் என்று சொன்னானோ.. என்னவோ. அல்லது புதுப் பெண்டாட்டியை மயக்கும் கதை ஏதும் சொன்னானோ என்னவோ.. வெடித்து சிரித்து… முத்தமிட்டு தொலைபேசியைத் தந்தான்.

”தாங்யூ மை ‌ப்ரெண்ட்” என்ற போது
ஹாப்பி சுவிசைட்…. என்று எனக்கு வாயில் வந்தது..
என்றாலும்.. அதை மறைத்தபடியே  ஹாப்பி மரேஜ் லைப் என்றேன் கையைப் பிடித்துக் குலுக்கியபடியே. தனது மற்றைய கையாலும் எனது கையை வாஞ்சையுடன் பற்றி ” யூ லைக் மை பிரதர்” என்றும் ”ஐ சீ யூ அனதர் டே” ‌ என்றும் விடைபெற்ற போது… தற்கொலையாளி தப்பும் சந்தர்ப்பம் இருக்குமா என்ற சந்தேகத்துடன் எனது ரயிலைப் பிடிக்க ஓடித்தொடங்கினேன்.

ரயிலில் குந்தியிருந்து சில தசாப்தங்களை ரீவைன்ட் பண்ணி‌னேன். என்னையும் அப்போ சிலர் நான் தற்கொலை செய்வதாக நினைத்திருந்திருக்கலாம். நான் இன்றும் உயிரோடு இருப்பதால், நம்ம பாகிஸ்தான் நண்பரும் இன்னும் பல வருடங்கள் குற்றுயிராய் வாழ்வார் என்று புரிந்து.

அது சரி.. அவர் என்னை சந்திக்கும் வரை நான் உயிரோடு இருப்பேனா?


இன்றைய நாளும் நல்லதே!


.

அது ஒரு துன்பியல் சம்பவம்


எனது இலக்கிய அரசியலில் இன்று ஒரு துன்பியல் சம்பவம் நிகழ்ந்தது. அதனால் உருவாகிய சினம் இன்னும் அடங்குவதாயில்லை.  சுத்தத் தமிழ், சுனாமியாய் வந்த போது அடக்க முடியாமல் சற்று அதிகமாகவே கக்கியும் விடடேன். சில நேரங்களில் ”அடங்க மறு, அத்துமீறு” என்பது  அவசியமாயிருக்கிறது, சில ”இலக்கியவாதிகளுடன்”  உரையாடுவதற்கு.

முகப்புத்தகத்தில் 10 கொமன்டும், 40 லைக் உம் கிடைத்தவுடன்  தான் ஒரு இலக்கியவாதி என்று கூக்குரலிடும் நவீன இலக்கியவாதிகள் கூட்டத்தைச் சேர்ந்தவன் நானில்லை. தவிர நான் ஒரு இலக்கியவாதியா என்னும் கேள்விக்கே விடை தெரியாதவன் நான்.

எனக்குத் தெரிந்ததை எழுதுகிறேன். எனக்கும், என் அனுபவங்களுக்கும் இடையே நடக்கும் ஒரு சோர்வில்லாத போட்டியே எனது எழுத்து. அண்ணண் எஸ்.ரா அவர்கள் ஒரு இடத்தில் ”எறும்புகள் இழுத்துக்கொண்டு போகும் வெல்லக்கட்டயைப் போல உலகை எனது இருப்பிடததுக்குள் இழுத்துக்கொண்டு வர முயன்றதன் விளைவுதான் என் எழுத்துக்கள்” என்கிறார். அவரின் வார்த்தைகள் எனக்கும் பொருந்துகின்றன.

தவிர எனக்குத் தெரியாதததை யாரிடமும் கேட்டறியும் வெட்கமும் இல்லை, தெரியாது என்று  சொல்ல தயக்கமும் இல்லை. இலக்கிய உலகிலுள்ள இரவின் மின்மினிப்பூச்சிகளை விட, அதே இலக்கிய உலகின் மண்ணுக்கள் இருக்கும் மண்புழுக்களின் அருகாமையே எனக்குத் ‌தேவையாய் இருக்கிறது.

என்னடா இவன் புலம்புறானே என்று  நீங்கள் நினைக்கலாம். காரணத்தை  அறிய விரும்புபவர்கள் இங்கு போய் வரவும். http://www.facebook.com/note.php?note_id=1552040487326

எனக்கு வந்திருந்த சந்தேகங்களை தீர்த்துக்கொள்வதற்காகவே அந்தப் பதிவை எழுத வேண்டியேற்பட்டது. அதில் பலர் பல கருத்துக்களைச் சொன்னார்கள். எனக்கும் சில விடயங்கள் புரிந்தன. அதை ஒரு ஆரோக்கியமான விவாதமாயே நான் பார்க்கிறேன்.

இன்று ஒரு அன்பர் தொ(ல்)லைபேசியில்,  உனக்கு உது தேவையில்லாத வேலை. கண்ட கண்டதுகளெல்லாம் உனக்கு திட்டுதுகள்.  உனக்கு தேவையா இது? அதை எழுதியிருக்க் தேவையில்லை, அப்படி எழுதுறதால என்ன பிரயோசனம் என்பவற்றோடு நிறுத்தாமல், அதைவிட இன்னும் அதீதமாய் எனது சுயத்தினுள் நீச்சலடிக்க முட்பட்ட போது , எனக்கு கண்ணாலும், காதாலும் புகை வர, வாயில் நல்ல தமிழ்  ஊற ... வடிவேலுவின் பாஷையில் சொல்வதானால் ”ரணகளமாகிப்” போனது  எமது சம்பாசனை.

எனக்குத் தெரியாததை நான் கேட்டறிகிறேன். அதாவது நான் சுகமாயில்லை என்பதை அறியுமளவுக்கு நான் சுகமாயிருக்கிறேன். இதுவே நானாயிருந்திருக்கிறேன். இனியும் இப்படித்தான் இருப்பேன்.

”யார் நமக்கரசர்? இங்கு எவர் இடல் நியமம்?'  இதையும் அந்த உரையாடலினூடாகவே அறிந்தேன்.

தான் சுகமாயில்லை என்பதை அறியுமளவுக்கு சிலர் சுகமாயில்லை என்பது, மிகவும் சீரியஸ்ஆன வருத்தம். அந்நோய் கண்டவர்களுக்கு சுகம் வரலாம், ஆனால் ஆள் தப்பாது.

நான் போகும் திசை எது என்பதை அறியாமல் நடக்க, நான் தயாராக இல்லை. விமர்சனங்களும், உரையாடல்களும், மாற்றங்களும் எனது பாதையின் வழிகாட்டிகள்.

சக மனிதனை ”கண்ட கண்டதுகள்” என்று நாம் விழிக்கும் போதே நமது ”இலக்கியத்” தரம் மிகத் தெளிவாய்ப் புலப்படுகிறது.  ”கண்ட கண்டதுகளிடம்” கற்றுக் கொள்வதற்கு எனக்கு எக்கச்சக்கமாய் இருக்கிறது. அவர்களும் தாம் சுகமாயில்லை என்பதை அறியுமளவுக்கு சுகமாயிருக்கிறார்கள். பெறவும் கொடுக்கவும், கற்கவும் கற்பிக்கவும் எமக்கிடையில் எவ்வளவோ இருக்கிறது. திட்டுவாங்கியும் கற்றுக்கொள்ளும் மனப்பாங்கு என்னிடம் உண்டு, அவர்களிடமும் நிட்சயம் இருக்கும். நான், என் பலவீனங்களுடனும், பலங்களுடனும் மனிதனாய் ஏற்றுக்கொள்ப்படுவதையே விரும்புகிறேன். நான் ஒன்றும் சூப்பர் மேன் இல்லை என்பதை நன்கு உணர்ந்திருக்கிறேன்.

சுயம் என்பது எவருக்கும் புனிதமானது. மற்றவரின் சுயத்தினருகே செல்வதென்பதே நீங்கள் மற்றவர் மீது வைத்திருக்கும் அன்பையோ, நட்பையோ கொச்சைப்படுத்துவதற்கு சமமாகும். மற்றவரை அவரின் சுயத்தடன் வாழ அனுமதிப்பதே உண்மை அன்பு அல்லது நட்பாகிறது.

என்மீதான அன்பினால்(?) நீங்கள் அதை எனக்குச் சொல்லியிருக்கலாம். தங்கள் அன்பிற்கு நன்றி. ஆனால் அதை பெற்றுக்கொள்ள நான் இன்னும் முன்னேறவில்லை. மன்னியுங்கள் இந்த காட்டுமிராண்டியை.


இன்றைய நாளும் ஒரு விதத்தில் நல்லதே

.

புனிதப் பூமியில் ஒரு படு பாவி

2010 ஆனிமாதத்தில் ஒரு நாள் நடந்த கதையிது.

அந்தக்காலத்தில் இருந்து இந்தக்காலம் வரை எனது பெற்றோகளின் தாய் மண்ணாகிய யாழ்ப்பாணத்திற்கும் எனக்கும் பெரியதொரு தொடர்புமில்லை, பந்தமுமில்லை, விடுமுறைக்கு போய் வரும் இடம் என்பதைத் தவிர.

பால்யத்தின் நேசத்தினாலாலும், மண்ணின் வாசத்தினாலும் என்னை வளர்த்து ஆளாக்கிய பூமியே புனிதப் பூமியாகியிருக்கிறது எனக்கு.  ஆம், மட்டக்களப்பு மண் எனக்கு புனிதப் பூமி.
.
ஏறத்தாள 25 ஆண்டுகளின் பின் மீண்டிருக்கிறேன் எனது புனிதப் புமிக்கு, இன்று. இடையில் ஒரு தடவை 8 மணித்தியால விசிட் அடித்திருந்தேன் 6 வருடங்களுக்கு முன். அது ஒரு கனவு போலானது. இம்முறை 5 நாட்கள் தங்கியிருந்து சுவைத்துப் போக நினைத்திருக்கிறேன். தோழமைகளின் சந்திப்புக்கள் நிறையவே நடக்கலாம்.

நான் இன்று காலை யாழ்பாணத்தில் இருந்து புறப்பட்டு மாலை மட்டக்களப்பை வந்தடையும் வரை கண்டதையும், இரசித்ததையும், அனுபவித்ததையும் எழுதுவதாகவே யோசித்திருக்கிறேன். இன்று.
தந்தாயாரின் மூத்த சகோதரியாரை யாழ்ப்பாணம் சென்று பார்த்து விட்டு இன்று காலை மட்டக்களப்பிற்கு புறப்பட்ட போது ஆரம்பிக்கிறது 100:100 வீதமான உண்மையான இந்தக் கதை.

...............

நேரம் 5.30 காலை..டேய் மருமகனே எழும்புடா நேரமாகுது என்ற 88 வயது மாமியின் குரலில் விடிந்தது நாள். எழும்பி எல்லாம் முடித்து நேரம் 6.30 ஆன போது போது வந்து சேர்ந்தான் பால்ய சினேகம் (இவனும் மட்டக்களப்பில் தான் படித்தவன்).

இனி எப்ப பார்ப்பனோ என்னும் வார்த்தைகளுடன் முத்தமிட்டு அனுப்பினார் மாமி. வரும் வழியில் மச்சாள் வீட்டில் குழல் புட்டும் முட்டைப் பொரியலும் உட்தள்ளி, மோட்டார் சைக்கிலில் உட்கார்ந்த போது நேரம் ஏழு.

நட்பு யாழ்ப்பாணத்தை ஒரு சுற்றுலாபயணிக்கு காட்டுவது போல் காட்டிக் கொண்டு வந்தான். காலையின் சுறுசுறுப்பு தெரிந்தது கடந்து போன மனிதர்களிலும் அவர் மனங்களிலும். மனோகரா தியட்டர் கடந்த போது பழைய ஞாபகங்கள் வந்து போயின.

இராணுவத்தினர் எங்கும் புற்றீசல் மாதிரி நின்றிருந்தாலும் எவருக்கும் எதுவும் செய்யவில்லை. துப்பாக்கிகள் மௌனித்திருக்கின்றனவோ.. இங்கும்? அவர்கள் முகங்களிலும் ஒரு ஆறுதல் தெரிவதாகவே பட்டது எனக்கு. புன்னகைத்தபடி கடந்து போனார்கள் சிலர்.

பஸ்ஸ்டான்ட்க்கு வந்து சேர்ந்தோம்.வவுனியா - மட்டப்பளப்பு ஊடாக காத்தான்குடி, என்று போட்டிருந்த பஸ்இல் ட்ரைவருக்கு பின்னால் ஒரு சீட் தள்ளி யன்னலோம் பிடித்து உட்கார்ந்தேன். நட்பு சனி மாலை மட்டக்களப்பில் சந்திப்போம் என்று கூறி விடைபெற மனமோ சுற்றாடலை கவனிக்கத் தொடங்கியது.

பஸ் முன் கண்ணாடியில் "ஓம்" என்பதை புதிய விதத்தில் எழுதுவதாக நினைத்து "ம்"மன்னாவின் வளைவு முடியும் இடத்தை தேவைக்கு அதிகமாகவே நீட்டி கடைசியில் அதை வளைத்தும் விட்டிருந்ததால் அந்த "ம்" பார்வைக்கு "ழ்" போல தெரிந்து "ஓம்" என்பதின் அர்த்தத்தை தூசணம் போல் காட்டிக் கொண்டிருந்தது. சில வேளை ஓம் என்றதுக்குள் எல்லாமே அடக்கம் என்பதை குறிப்பிடத்தான் அப்படி எழுதியிருந்தார்களோ? இந்தளவுக்காவது தமிழைக் கற்றிருக்கிறார்களே என்று சற்று பெருமையாய்த் தான் இருந்தது. அது சிங்களவருக்கு சொந்தமான பஸ்.

பஸ்ஸ்டான்டில் சொகுசு பஸ் கொழும்பில் இருந்து வந்து நின்றது. ஒரு நடுவயதான பெண் அழகாய் பல நகை உடுத்தி, நாகரீகம் தெரிந்தவர் போல (சர்வ நிட்டசயமாய் வெளிநாடு தான்) இறங்கிமுடிய முதல் பலர் அவரை நெருங்கி அக்கா ஓட்டோ வேணுமா என்றனர்.. அவர் அதைக்கவனிக்காமல் தொலைபேசியை காதில் வைத்த 10 நிமிடத்தி;ல் ஒரு ஓட்டோ முன்பக்கத்தில் வேப்பமிலை கட்டியபடி வந்து நின்றது.. என்ன பிள்ளை மெலிஞ்சிட்டாய் என்றவாறு வந்தார் ஒரு தாய் (எனக்கு அந்தத்தாயிடம் உது மெலிவோ ஆ? என்று கேட்க வேணும் போலிருந்தது) ஏன் நம்மவர்கள் சும்மாவெல்லாம் பொய் சொல்கிறார்கள்?
பஸ்ஸில் வந்த சாமான்களில் முக்கால்வாசி அவருடையதாயிருந்தது. ஒட்டோ நிரம்ப அடுத்த ஓட்டோ பிடித்து நிரப்பினாhகள் மிச்சத்தை. நானோ இவ்வளவு பாரத்தையும் எப்படி விமானத்தில் அதுவும் ஒரு டிக்கட்இல் விட்டார்கள் என்று மண்டையை உடைத்துக் கொண்டிருக்கும் போது அந்த அக்காவும், அம்மாவும் 2 ஓட்டோக்களும் மறைந்து போயின.

வைரவர் கோயிலுக்கு முன்னால் கனக்க நல்ல நாய்களும், சில சொறி நாய்களும், ஒரு நொண்டி நாயும் தங்களின் "நாய்" வாழ்வை வாழ்ந்து கொண்டிருந்தன. வாழ்வு தன் வாழ்வையும் நாய்களின் வடிவில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது.

நேரம் 7.30 ஒரு தம்பி வந்து அய்யா! எங்க போறீங்க என்றார்.. மட்டக்களப்பு என்றதும் மறுபேச்சின்றி 550 ரூபாக்கு டிக்கட் தந்து, தனது பிட்டத்தை அடுத்த சீட் ஹான்டிலில் முண்டு கொடுத்து அடுத்தவருக்கு டிக்கட் எழுதத் தொடங்கினார்.

ட்ரைவர் வந்தார். ஸ்ட்டாட் பண்ணி 4 தரம் தேவையில்லாமல் அக்சிலேட்டரின் அடி மட்டும் அமத்திப் பார்த்தார். பஸ் அசையவில்லை, ஆனால் உயிர் போற மாதிரி கதறியது. பின்னால் வாழைக்குலை இருந்தால் பழுத்திருக்கும்.. அப்படிப் புகைத்தது.

வைரவர் கோயில் தாண்டும் போது வைரவர் கோயில் மணியடித்தது. அதனர்த்தம் "பாவியே  போய் வா" என்பதாயிருக்குமோ?

அப்போது ட்ரைவர்தம்பி பஸ்ஐ மடக்கி வெட்டி, வீதியில் ஏற்றி ஈவு இரக்கமில்லாத வேகத்தில் ஓடினார். எனக்கு பயமாயிருந்தது. ஆனால் அதை அவர் கவனிப்பதாயில்லை.

எனது மனம் மனோவேகத்தில் மட்டக்களப்பை நோக்கி நகர ஆரம்பிக்க ட்ரைவர் தம்பியோ.. அண்ணண் உங்கட மனதை விட நம்ப பஸ் வேகமாய் போகும் என்று காட்ட முயற்சிப்பது போலிருந்தது அவர் காட்டிய வேகம்.

சூரியன் எப் எம் ரேடியோ போட்டனர். அதில் வந்த ஒரு விளம்பரம் எனது கவனத்தை ஈர்த்தது.. அது இப்படி இருந்தது. "அவுஸ்திரேலிய அரசு இலங்கையருக்கு புகலிட அனுமதி வழங்குவதை நிறுத்தியுள்ளதாகவும், கப்பலில் அவுஸ்திரேலியா போய் பணத்தை விரயமாக்காதீர்கள் என்றும், அப் பயணம் ஆபத்துக்கள் பல கொண்டது என்றும்"
இந்த விளம்பரத்தை யார் ஸ்பொன்சர் பண்ணியிருப்பார்கள்?

திடீர் என ஒரு பஸ் எம்மை முந்திப் போகிறது.. ட்ரைவர் தனது பரம்பரைமானம் போய்விட்டது போல நினைத்தாரோ என்னவோ கலைக்கிறார், கலைக்கிறார்.. பயங்கரமாய் கலைத்து அதை எட்டிப்பிடித்து முந்திய போது ஒரு விதமாய் ஹோன் அடித்தார். (நக்கலாயிருக்குமோ?),தம்பிமார் இருவரும் ட்ரைவர் அண்ணனை பாராட்டிக்கொண்டிருந்தனர். எனது உயிர் திரும்பக் கிடைத்த சந்தோசத்தில் இருந்தேன் நான்.

வழி எங்கும் இராணுவ முகாம்கள் தங்கள் இருப்பை உணர்த்திக் கொண்டிருந்தன. மட்டக்களப்புக்கு போய்ச் சேரும் வரை கிட்டத்தட்ட 100க்கும் அதிகமான ராணுவ முகாம்களைக் கண்டிருப்பேன். ஆனால் கெடுபிடிகள் இருக்கவில்லை, இருப்பினும் மனதை நெருடியுது ரானுவத்தினரின் எண்ணிக்கை. சமாதானம் இன்னும் வரவில்லை என்பதையறிய அதை விட சான்று எனக்குத் தேவையாய் இருக்கவில்லை.

பச்சையில் வெள்ளையாய் எழுதப்பட்டிருந்த பெயர்ப்பரகையில் முகமாலை என்றிருந்தது. மனதில் "முகமாலை முன்னரங்கு" என்றும் சொற்பதம் ஞாபகத்தில் வந்து போனது.
நான் போரின் அகோரம் உணர்ந்தது இங்கு தான். ஒரு குறிப்பிட்ட பகுதியில் "நின்ற பனையை" விட "முறிந்த பனைகள்" அதிகமாயிருந்தன. எறிகணைகளின் அகோரப்பரிமாற்றத்தின் விளைவு அது என்று புரிய அதிக நேரமெடுக்கவில்லை. அத்தோடு முல்லைத்தீவை பார்க்கக் கூடாது என்றும் நினைத்துக் கொண்டேன்.

முகமாலையில் ஒரு இடத்தில், வீதியோரமாக ராணுவத்தினர் எறிகளை கோதுகளை அடுக்கிக் கொண்டிருந்தனர். மலைபோலிருந்தன கந்தகத்தை கக்கி ஓய்ந்த அந்த செப்புக் குடுக்கைகள். (செப்பின்விலை அதிகம் என்பதை அறிவீரா?... அட அட போரினால் கனிவழங்கள் எமது பூமியில்..) போரினால் நாம் பெற்ற நன்மை இது தானோ?

தம்பீ முறிகண்டியில நிப்பாட்டுவாங்களோ என்றார், அருகில் இருந்த பெரியவர். அருகிலிருந்தவர் ஒருவர் சிலவேளை என்றார். பெரிசு கடுப்பாகிவிட்டார்.
என்ன சில வேளையோ? என்றார் குரலை உயர்த்தி.
அவர் அர்ச்சனை போட வேண்டுமாம் முறிகண்டிப் பிள்ளையாருக்கு.. கண் ஒப்பரேசணுக்கு போறாராம் என்றார்.
கூல் பெரிசு.. கூல் என்று சொல்ல நினைத்தேன்.. அவரின் சினம் என்னையடக்கியது.

முறிகண்டியில் நிப்பாட்டியவுடன் ஓடிப்போய் அர்ச்சனைத் தட்டு வாங்கி, தேங்காய் உடைத்து, பெரிதாய் திருநீறு பூசி வந்தமர்ந்தார் பெரியவர்.

வெளியில் சிவப்பு டீசேட் போட்ட இளைஞர் குழு ஒன்று என் கவனத்தை ஈர்ந்தது. இறங்கிப் போய் பார்த்தேன் அவர்கள் மேலங்கியில் டீ. டீ. ஜி என்றும் டனிஸ் டீமைனிங் (நிலக்கண்ணிவெடிகளை அகற்றுபவர்கள்) குரூப் என்றும் எழுதியிருந்தது.

முறிகண்டி கச்சானில் மெய் மறந்திருந்த ஒரு  தம்பிடம் மெதுவாய் கதைகுடுத்தேன்.முழங்காவிலில் வேலை செய்கிறார்களாம்.. அள்ள அள்ள குறையாமல் வருகிறதாம் நிலக்கண்ணி வெடிகள்.

வெடி விளைந்த புமியல்லவா? அது தான் விளைச்சல் பலமாயிருக்கிறது போல என்று நினைத்துக் கொண்டேன். தன்னுயிரை எந்தேரமும் இழக்கக்கூடய தொழிலைச் செய்யும் இவர்களும் ”அவர்களை” களைப் போல் புனிதர்கள் தான்.

வழியோரத்தில் பல இடங்களில் மிதி வெடிக்கான எச்சரிக்கை போடப்பட்டிருந்தது. அதனருகிலும் ராணுவ காவலரண்கள் இருந்தன. பல கிலோமீற்றர் நீளத்துக்கு இந்த மிதிவெடி வயல்கள் நீண்டிருந்தன... விதைப்பு மிகச் சிறப்பாக நடைபெற்றிருக்கிறது என்பது மட்டும் தெளிவாய் புரிந்தது. அறுவடையை நினைத்தால் பயமாயிருந்தது.

தவிர்க்கமுடியாத காரணத்தால் பஸ் ஒரு  உள்ளூர்ப் பாதையால் சென்றுகொண்டிருந்தது
"மகா கண்தரவ" என்னும் குளத்தினருகால் போய்க் கொண்டிருந்தோம். வாய்க்கால்களில் நீர் ஓடிக்கொண்டிருக்க சிறுசுகள் நீந்திக் களித்தன.
திடீர் என ஒரு ஆல மரத்தின் கீழ் முருகனின் பிரதர், பிள்ளையார் தனிமையில் உட்கார்ந்திருந்தார். அவரைச் சுற்றியிருந்த இடம் சுத்தமாயிருந்தது. நம்ம பிள்ளையார் இங்கு என்ன செய்கிறார் என்று போசித்தேன். சமாதானம் வெளிநாட்டு கோயில்களின் இம்சை தாங்காமல் சிங்களவர்களிடம் asyl அடித்திருப்பாரோ?
கண்டி வீதியில் ஓடிக் கொண்டிருந்தது பஸ்

வீதியோர குளத்தில் குளிக்கும் பெண்
மாட்டை இழுத்துப் போகும் கிழவன்
வீதியோரத்தில் மூத்திரம் பெய்யும் சிறுவன்
கடந்து போகும் பாடசாலைச் சிறுமியர்
குந்திருந்து அலட்டும் இளசுகளும் பழசுகளும்
மரக்கறிகள் விற்கும் பெண்கள்
இப்படியாய் கடந்து போய்க் கொண்டிருந்தது பொழுதும் பாதையும்.
பாதையின் நடுவில் ஒரு கோடு போட்டு இரண்டாய் பிரித்திருந்தனர். டரைவர் தம்பீ அந்தக் கோடுகளின் இடது பக்கத்தில் பஸ்ஐ ஓட்டிக் கொண்டிருந்தார்.
ஹபரனை வந்தது. கண்மட்டும் தெரியும் உடையணிந்த இரு பெண்கள் கடந்து போயினர்.
சூரியன் எப். எம் " விடிய விடிய இரவு சூரியன்" என்று ஏதோ விளம்பரம் பண்ணிணார்கள். இவர்களால் ஏனோ மெதுவாய் பேசமுடியாமல் இருக்கிறது. அவசர அவசரமாய் பேசி ஓடுகிறார்கள்.

கடந்த இரண்டு நாட்களாக எனது வாழ்க்கை அதிகளவில் பஸ்ஸில் கழிந்திருக்கிறது. இதில் நான் கண்டு கொண்டதென்னவென்றால் ட்ரைவர் தம்பிமார் காதல் தோல்விப் பாடல்களையே கேட்க விரும்புகிறார்கள் என்பது தான்.  காரணங்கள் ஏதும் இருக்குமோ?

பஸ் ஒரு மயானத்தை மெதுவாய் தாண்டிக் கொண்டிருக்கும் போது அந்த மயானத்தில் இருந்த ஒரு சமாதி என் கவனத்தை ஈர்த்தது. இலங்கையின் வரைபட வடிவில் அமைந்திருந்தது அது. அதன் நடுவில் துப்பாக்கியுடன், ராணுவச்சீருடையில் ஒருவர் சிரித்துக் கொண்டிருக்கும் படம் இருந்தது. இதுவும் பாழாய்ப் போன யுத்தத்தின் எச்சம். ஒரு மகன், சகோதரன், காதலன், தந்தை காற்றில் கரைந்திருக்கிறார் இங்கும்... இது மாதிரி எங்கள் பகுதியிலும் பலர் இருக்கிறார்கள், சமாதியே இல்லாமல்.

"விலங்குகள் கவனம்" என்று ஒரு இடத்தில் எழுதியிருந்தார்கள்.படம் ஏதும் போடப்பட்டிருக்கவில்லை. இதை எழுதியவர் ஒரு குசும்புக்காரராகத் தான் இருக்க வேண்டும்... இது எந்த விலங்குகளைக் குறிக்கிறது? மனித உருவிலுள்ள விலங்குகளையா?

பஸ் பொலனநறுவை, மன்னம்பிட்டி தாண்டி வெலிக்கந்தையை அண்மித்து புகையிரதப் பாதைக்கு சமாந்தரமாக போய்க்கொண்டிருந்த போது "ஊத்துச்சேனை முத்து மாரியம்மன்" திருவிழா நடந்து கொண்டிருப்பதாக விளம்பரம் அறிவித்துக் கொண்டிருந்தது. மனதில் வந்து போனது பால்யத்தில் திருவிழாக் காலங்களில் காட்டி கூத்தும், சேட்டைகளும். அப்பப்பா.. ஈரலிப்பான பருவம் அது. அடித்த லூட்டி கொஞ்சமா  நஞ்சமா?

புனானை புகையிரத நிலையத்தை கடந்து கொண்டிருந்தோம். கைகாட்டி தனது கையை மேலே தூக்கி வைத்திருந்தது. கைகாட்டிகளின் மிடுக்கு அலாதியானது.. கவனித்தப்பாருங்கள் அடுத்த முறை.

கண்முன்னே கடந்து போன இராணுவ முகாமின் வாசலில் "சவால்களின் மீதான வெற்றி" என்று ஆங்கிலத்தில் பெரிதாய் எழுதிப் போட்டிருந்தார்கள்.. பாவமாய் இருந்தது. எது வெற்றி என்று தெரிந்து கொள்ளாதவர்களை நினைத்து. ஓரு இனத்தின் உணர்வுகளோடு விளையடுகிறார்கள் சிலர். வேதனை என்னவென்றால் அவர்களே சமாதானம் பற்றியும் பேசுகிறார்கள்.

அடுத்து வந்த இராணுவ முகாமின் முன்பக்கத்தில் ஒரு அழகிய மரக்குற்றி ஒன்றை வைத்து அலங்கரித்திருந்தார்கள். இன்று கடந்து வந்த முகாம்களில் இது வித்தியாசமாய் இருந்தது. ஏவுகணையில் இருந்து... சிறு துவக்கு, மற்றவரை தாக்கும் வசனங்கள் என்றிருந்த நிலைமாறி இயற்கையை துணைக்கழைத்த இந்த ராணுவமுகாம் மற்றவைகளை விட அழகாயும் இருந்தது. சற்று மனிதம் மிச்சமிருக்கிறதோ?

ஓட்டமாவடிப் பாலம்...... எனது புனிதப்பூமியின் ஆரம்ப எல்லை... மனம் பஸ்ஸை விட வேகமமாய பாலத்தைக் கடக்கிறது. அட.... இது புதுப்பாலம்.

எனது புனிதப் புமியில் நான்..  எங்கும் கிடைக்காத ஒரு ஆறுதல் குடிவருகிறது மனதுக்குள். இதையா கேடிக்கொண்டிருந்தேன் 25 வருடங்களாக?
அல் இக்பால் வித்தியாலயம் கடந்து போகிறது எனது மத்திய கல்லூரி மனதில் வந்தாடுகிறது.
சிங்கம், ராவணண் படங்களுக்கான போஸ்டர் அழியாத கோலங்கள், நினைத்தாலே இனிக்கும் படப் போஸ்டர்களை ஞாபகப்படுத்துகிறது.

மட்டக்களப்பு நெடுஞ்சாலை புனரமைக்கப்படுகிறது, கல்லுக்குமியல்களும், கிறவலும், மணலும், தென்னையும், பனையும் கடந்து போகின்றன.
காற்றில் உணர்ச்சிகளின் கலவையாய் நான். நெஞ்சு விம்முகிறது, வயிற்றுக்கள் ஏதெதோ செய்தது, அடிக்கடி கண்கள் குளமாகிக் கொண்டிருந்தன.

கிரான் என்ற பெயர்ப்பலகை கண்ணில் பட்டதும் ஒரு செங்கலடித் தேவதையிடம் (செங்கலடி என்பது ஒரு ஊர்) பெருங்காதல் கொண்ட இந்த ஊர் நண்பன் மனதில் வந்து போனான்.

சித்தாண்டியும் கடந்து போயிற்று சித்தாண்டி முருகனும், அப்பாவின் நண்பர் ”கந்தப்போடியாரும்” ஞாபகத்தில் வந்தார்கள்.  முன்பொருமுறை இதேயிடத்தை நான் கடந்த போது  கொண்று வீசப்பட்டிருந்த 12 உடலங்களும், பயம் கலந்த அந்த நாட்கள் இன்னும் மறக்கப்படவில்லை என்பதை ஞாபகமூட்டின.

வந்தாறுமூலையும் கடக்கிறது..எங்களின் ஆஸ்தான வாசிகசாலை இங்க தான் இருந்தது. முன்னைநாள் வந்தாறுமூலை மகாவித்தியாலயமும் இன்றைய கிழக்குப்பல்கலைக்கழகமும் கடந்து போக 1980 களின் இறுதியில் இந்த இடத்தில் கைது செய்யப்பட்டு காணாமல் போன பால்ய சினேகம் ”பேக்கரி பாஸ்கரன்” ஞாபகத்தில் வந்து போனான். எத்தனையை இழந்திருக்கிறோம் கொதாரிவிழுந்த போரினால்?

அடுத்தது செங்கலடி.. நமது சிற்றரசின் எல்லை ஆரம்பிக்கும் இடம். பஸ்க்கு முன்னே போகிறது எனது கண்களும் மனமும். செங்கலடிச்சந்தி கடக்கிறது. இந்த இடத்தில் இராணுவத்தால் கொலைசெய்யப்பட்ட  மிகவும் நெருங்கிய சிறுவனெருவனின் ஞாபகங்களும், பால்யத்து ஞாபகங்களும்,, ”துரோகி” என்று வீதியோரக் கம்பங்களில் தொங்கியவர்களின் நினைவும் மனம் முழுவதையும் ஒரு வித மகிழ்ச்சி, துக்கம், ஏக்கம் போன்ற உணர்ச்சிகளால் ஆட்கொண்டிருந்தது. பெருக்கெடுத்த கண்கள் கலங்கி பார்வையை மறைக்க, அதை துடைத்து நிமிரும் போது பஸ் ஏறாவூரை நெருங்கியிருந்தது.

ஏறாவூர் எங்கள் ராஜ்யத்தின் தலைநகர். பிள்ளையார் கோயில் புதுப்பொலிவுடன் தெரிய, அதனருகில் தெரிந்தது ஏறாவூர் காளிகோயில் திருவிழா என்னும் விளம்பரம். உடம்பு தான் பஸ்ஸில் இருந்ததே தவிர மனம் எப்போதோ இறங்கி ஓடிவிட்டிருந்தது ஏறாவூரின் புழுதி  படிந்த வீதிகளில்.
புன்னைக்குடா சந்தியை கடந்து இஸ்லாமிய சகோதரர்களின் எல்லைக்குள் போனதும் ஒலிபரப்பாளனாய் வர விரும்பி, திறமையிருந்தும் அரசியல் பலமில்லாததால் தோல்வியுற்ற அப்துல் ஹை ஞாபகத்தில் வந்தார். ஒன்றாய் வாழ்திருந்த சமுதாயங்கள் ஏற்படுத்தப்பட்ட ரணங்களை மறந்து வாழத் தொடங்கியிருப்பது போலிருந்தது. எனது பேராசையும் அது தான்

பழைய ஐஸ்கிறீம் கொம்பனி கடந்து போகிறது. சத்துருக்கொண்டான் வருகிறது. (பெயரைக் கவனித்தீர்களா? சத்துருக்....கொண்டான்)... இந்த மண்ணில் எங்கோ ஓரு இடத்தில் பெரும் எண்ணிக்கையில் புதைந்து போன என்னுறவுகள் இருக்கிறார்கள், மெளனமாய். எமது நெருங்கிய பால்ய நண்பனொருவனும் இருக்கிறான் அவர்களுடன்.  சபிக்கப்பட்ட பூமியிது. (மனித உரிமைகள் பெருமளவில் மீறப்பட்ட இடங்களில் இதுவுமொன்று)

மனது பழைய ஞாபங்களுக்குள் மூழ்கியிருக்க, தன்னாமுனை தேவாலயம், அதைத் தொடந்து வாவியோரமாய் வரும் நீண்ட பாதை, பின்பு பிள்ளையாரடிக் கோயில் என பஸ் கடந்து கொண்டிருக்கிறது. (பிள்ளையாரடியிலும் ஒரு அழகிய வெள்ளைச்சட்டைத் தேவதை இருந்தாள் 1980 களில்) வலையிறவு சந்தி சந்தி கடந்து உறணிக்கு முன் ”மட்டக்களப்பு மாநகரம் உங்களை வரவேற்கிறது” என்றிந்தது. தலைவணங்கி மரியாதையை ஏற்றுக்கொண்டேன்.

பஸ்டிப்போ, வயோதிபர்மடம், தோவாலயம் கடந்து கோட்டமுனை சந்தியில் நிற்கிறது பஸ்.

பஸ் டவுன் போவாது.. டவுன் போறவங்க இங்க இறங்கணும் என்ற குரல் கேட்டு இறங்கிக்கொண்டேன். பாவியின் கால்கள் புனிதப்பூமியில்.

நட்பூ வந்து மோட்டார்சைக்கிலில் ஏற்றிக்கொண்டான்.... கோட்டைமுனைப் பாலத்தைக் கடந்த போது உப்புக்காற்றும் முகம் தேடிவந்து ஆசீர்வதித்துப் போனது. எனது பாடசாலையும் கடந்து போகிறது. நெஞ்சு முழுவதும் பெருமிதம். கண்களில் கண்ணீர்.

வெளிநாட்டின் ரணங்கள் செப்பனிடப்பட்டு, பாவி ரட்சிக்கப்பட்டுக் கொண்டிருந்தான், அவனது புனிதப்பூமியில்.


அன்றைய நாள் மிக மிக நல்லது.


.

இரத்தத்தின் அர்த்தம்

நேற்று மாலை ஒரு கடையின் கீழ்மாடியில் கணணி திருத்திக்கொண்டிருந்தேன். அது நிலத்தின் கீழ் அமைந்திருக்கும் பகுதி. மேலேயுள்ள கடை ஒரு internet cafe. கல்லாவில் ஒரு அழகிய பாக்கிஸ்தான் நாட்டுப் பைங்கிளி குந்தியிருந்தாள்

நிலத்தின் கீழ் அழைந்துள்ள பகுதியாதலால் எப்போதும் மிகவும் அமைதியாகவே இருக்கும். திடீர் என்று மேல் தளத்தில் ஏதோ பெரியதொரு பொருள் விழுந்தது போன்றதொரு பெருஞ்சத்தம் கேட்டது.  ஏதும் பெரியதொரு பொருள் விழுந்திருக்கலாம் என்ற அசிரத்தையாய் இருந்தேன்.

திடீர் என கடையின் கல்லாவில் அமர்ந்திருந்த பெண் பெருத்த குரலில் என்னை அழைப்பது கேட்டு மேலே ஓடினேன். அங்கே பார், அங்கே பார் என்று அவர் கையைக் காட்டிய திசையில் ஒரு மனிதரின் கால்கள் நிலத்தில் தெரிந்தன. அருகே சென்ற போது அவர் மயக்கத்திலிருந்தார். 

கணப்பொழுதில் நடந்ததை ஊகிக்க முடிந்தது. வழமையான கதிரைகளை விட உயரமாக கதிரையில் உட்கார்ந்திருந்தபடியே கணணியை இயக்கிக் கொண்டிருந்தவருக்கு வலிப்பு வந்ததால் கீழே விழுந்திருக்கிறார். நிலம் பளிங்குக் கற்களினால் ஆனது. எனவே  பலமாய் அடிபட்டு கண் இமையருகே வெடித்து இரத்தம் வெள்ளமாய் ஓடிக் கொண்டிருந்தது. மனிதர் குப்பற விழுந்திருந்தார்.

விரைவில் 113 இலக்கத்தக்கு அழைத்த விபரம் சொல்லப் பணித்தேன், கல்லாவில் உட்கார்ந்திருந்த பெண்ணை. கடையில் இருந்த ஒருவரின் உதவியுடன் அவரை திருப்பிய போது இரத்தோட்டம் அதிகரிக்க  அருகில் இருந்த உடையினால் காயத்தை அமத்தியவாறே அவரின் மூச்சை கவனித்தோம். மூக்கால் மூச்சு வரவில்லை.  அந் நேரம் 113 தொலைபேசியில் தொடர்புகொண்டு நிலவரத்தை அறிவித்த போது, எம்மை அவரின் நெஞ்சில் கையை வைத்து அமத்தச் சொன்னார்கள். அருகில் இருந்தவர் நெஞ்சை அமத்திக் கொண்டிருந்த போது  அவரின்  கழுத்தின் பின்புறம் கையை வைத்து தலையை நிமிர்த்தினேன்.  சளியும், இரத்தமும், திரவப்பொருட்களும் வாய்க்குள் தேங்கியிருந்தது. . தலையை சரித்ததும் அவை வளிந்தோட மீண்டும் கழுத்தின் பின்புறம் கையை வைத்து தலையை நிமித்தினேன். இப்போ மூச்சு எடுப்பதற்கு முயற்சித்தார். இரத்தமும், திரவங்களும்  வாயிலிருந்த தெறித்துக் கொண்டிருக்க ஒரு முறை இருமி மூச்சை ஆழமாக இழுத்து விட்டார்.

113 தொலைபேசியில் நேரடியாக நாம் என்ன நடக்கிறது என அறிவித்துக்கொண்டிருக்க அவர்கள் எம்மை வழிநடத்திக் கொண்டிருந்தனர். உடையினால் அமத்தப்பட்டிருந்த காயத்தில் இருந்து இரத்தம் வழிவது நின்றிருந்தது. மனிதரின் ‌ கண்ணளைச் சுற்றி நீலம் பாய்திருக்க மனிதர் மயக்கம் கலைந்தார். அப்போது தான்  அவரின் காதில் இருந்த ஒலிபெருக்கி   சாதனம்  கண்ணில் பட பலத்த சத்தமாய் ” ஆறுதலாய் படுத்திருங்கள்” வைத்தியர் வந்து கொண்டிருக்கிறார் என்றேன். ஏனோ திமிறி திமிறி  எழும்ப முயற்சிக்க அவரை பலவந்தமாக படுக்கவைத்துக் கொண்டிருந்தோம். சிறிது நேரத்தில் சாதாரணமாய் மூச்சுவிட்டபடியே அமைதியாகினார்.

வெளியே போய் அம்பியூலன்ஸ் வருகிறதா எனப் பார்த்தேன். கடைக்கு முன்னால் இருந்த வாகனங்களை அப்பறப்படுத்தக் கேட்டேன். அப்பறப்படுத்தினார்கள். அம்பியூலன்ஸ் 6 - 7 நிமிடத்தில் வந்தது. எமக்கு அவ்வளவு நேரமும் யுகமாய்க் கழிந்தது.

அவர்கள் அம் மனிதரை அழைத்துப்போயினர். இரத்தம் எல்லாம் துடைத்து சுத்தப்படுத்தி,  எனது கைகளை தொற்றுநீக்கியால் சுத்தப்படுத்திக்கொண்டு அமர்ந்த போது மனம் மட்டும் ஆறாமல் ஓடத்தொடங்கியிருந்தது.

இது ஒரு சிறு சம்பவம்.

எனக்கு உதவிக்கு 113 தொலைபேசியில் இருந்து  10 செக்கனுக்குள் உதவி கிடைத்தது. எதிர்க்கரையில் இருந்து ஒரு மருத்துவர் என்னை வழி நடாத்தினார். அம்பியூலன்ஸ் வண்டி 6 -7 நிமிடத்தில் வந்தது. அதிலும் வைத்தியர் இருந்தார்.

ஆனால், யுத்தத்தின் இறுதி நாட்களை எண்ணிப் பார்த்தேன். எப்படி அவ்வளவு கொடுமையான நாட்களை மக்கள் கடந்து வந்தார்கள். மயங்கி விழுந்த ஒருவருக்கே நான் இந்தப் பாடு பட்டேன். நெஞ்சு படபடத்துக்கொண்டிருந்தது. ஏதும் நடக்கக் கூடாதது நடந்து விடுமோ என்று பயந்தேன்.

எண்ணிக்கையற்ற மரணங்களின் மத்தியிலும், ஆறாய் ஓடும் இரத்தத்திலும், அவயங்களை இழந்தும், மழையாய் பெய்த எறிகணைகளின் மத்தியில் எப்படி இவர்களால் வாழ முடிந்தது? அவர்களால் இப்போதும் நிம்மதியாக இருக்கமுடியுமா?

இன்றைய இரத்தத்துக்‌கே எனக்கு தலை சுற்றியது.  நான் போரின் மத்தியில் இருந்திருந்தால் என்னால் இப்படி இயங்கியிருக்க முடியுமா? இயங்கியிருந்தாலும் அந்தக் கொடிய காட்சிகளை மனம் தான் மறந்திருக்குமா?  ஒரு பைத்தியமாய் திரிந்திருப்பேன்.

2009 இல் இங்கிலாந்துக்கு சென்றிருந்த போது வெளிநாட்டு உதவி நிறுவனமொன்றில் இருந்த, வைத்தியப்பிரிவில் தொழில்புரிந்த ஒருவரை நண்பரின் நண்பராகச் சந்திக்க நேர்ந்தது. அவரிடம் 1000த்துக்கும் அதிக படங்கள் இருப்பதாகச் சொன்னார். அத்தனையும் பேர் தந்த மனித அழிவுகள். காயங்களைக் கண்டு மனம் வரண்டுவிட்டது என்னும் தொனியில் பேசினார் அவர். அவர் கூறிய நம்ப மடியாத செய்திகளும் உண்மையானவை என்று பின்னால் தெரிந்து கொண்டேன்.

அதேபோல் இன்னொரு நண்பர் வவுனியா சென்றிருந்த போது (2009 நடுப்பகுதியில்) வைத்தியசாலைக்கு செல்ல விரும்பி அதனைத் தெரிவித்த போது,  அங்கு போகாதே உன்னால் தாங்கமுடியாது என்று சொல்லி மருத்துவர்கள் தடுத்ததாக அறிந்தேன்.


சாலையில் கடந்துபோகும் வானங்களை பிரஞ்ஞையில் கொள்ளாததைப் போல் நாட்களும், மாதங்களும், ஆண்டுகளும் ஓடிவிட்டன. பலரின் காயங்கள் ஆறியிருக்கலாம் ஆனால் அவர்களின் காயத்தில் உள்ள காயங்கள் ஆறுமா?.

அது பற்றி நமக்கென்ன கவலை,  நாங்கள்  தானே கிழமைக்கு பல தடவைகள்  வார்த்தை ஜாலத்துடன்  விஸ்கியும், கோழிக்காலும் குழைத்துண்டபடி பிரச்சனைகளை தீர்த்துக் கொண்டிருக்கிறோமே.

சமுக பிரஞ்ஞையும் பொறுப்புமற்ற மனிதர்களாய் மாறிவிட்டேமா?

இன்று ஒருவரின் சிறு காயம் இத்தனையையும் சிந்திக்த்தூண்டினாலும், நாளை, மீண்டும் இவை மறந்து‌போகும். வழமை போல.

நானும் மனிதன்!  ஹய்யோ .. ஹய்யோ!


இன்றைய நாளும் நல்லதே!


.

சர்வதேச பெண்கள் தினத்தில் எனக்கு வந்த சோதனை

அய்யா, அம்மா நான் ஏதும் பெண்களுக்கு எதிராக கதைக்கிறேன் என்று நினைத்து என்னைக் கொல்லும் நோக்கத்துடன் நீங்கள் வந்திருந்தால் .. கூல் ..கூல்.
வன்முறைக் கலாச்சாரத்தை கைவிடுங்கள்... பேச்சாயுதம் பூண்ட தமிழர்களல்லவா நாம. 

தலையங்கம் தான் சுடாயிருக்குதே தவிர வேறொறு மசிரும் இந்தப் பதிவுக்குள் இல்லை. ஆனால் நான் எழுதப்போவதெல்லாம் உண்மை. ஓஸ்லோ முருகன் சத்தியமா உண்மை. ஒஸ்லோ அம்மன் சத்தியமாக உண்மை.

இன்று காலை எழும்பி குளித்துவிட்டு காதைத்துடைத்துக் கொண்டிருக்கும் போது தான் கவனித்தேன் காதுக்குள் இருந்து, சூரிய ஒளியை நோக்கி நீண்டு வளரும் இலைகள் போன்று, பல மயிர்கள் நீண்டு வளர்ந்திருப்பது தெரிந்தது. தவிர எனது தலையில் இருக்கும் ஒரு லட்சத்து எழுபத்திநாலாயிரத்து நானூற்று முப்பத்தி நான்கு மயிர்களும் தேவைக்கு அதிகமாக வளர்ந்திருந்தன. அதாவது 5 மில்லிமீற்றர்  நீளமாக வளர்ந்திருந்தன. இதன் காரணமாக நரை மயிர்கள்  எனது  யௌவனத்தின் ஒளியை சூரியனின் ஒளியை மறைக்கும் முகிற்கூட்டம் போன்று மறைத்துக்கொண்டிருந்தது.

அப்போதே இதற்கு ஒரு முடிவு கட்டுவதாக முடிவெடுத்துக்கொண்டேன்.  மாலை எனது ஆஸ்தான முடிவெட்டும் பாலஸ்தீன நண்பரிடம் போன போது அவர் கடையைப் பூட்டிவிட்டு எங்கோ போயிருந்தார்.  மனதுக்குள் அவரைத் திட்டியபடி மீண்டும் திரும்பி வந்துகொண்டிருந்த போது ஒரு ஜனநடமாட்டமில்லாத இடமொன்றில் ஒரு சலூன் இருந்தது. அதில் கடை உரிமையாளர் அல்ஜசீரா டீவி யில் கேர்னல் கடாபியின் தலையெழுத்தை பார்த்துக் கொண்ருந்த போது தான் நான் அக்கடையினுள் புகுந்தேன்.

என் தலைமயிரை என் தொப்பி மறைத்துக்கொண்டிருந்தது. தலைமயிர் வெட்டலாமா என்றேன். நிமிர்ந்து பார்த்தார். என்ன நினைத்தாரோ தெரியவில்லை உட்காருங்கள் என்றார். நானும் ஜக்கட்ஜ முதலில் களட்டி வைத்து, கதிரையில் குந்திய பின்பே தொப்பியைக் களட்டினேன். எனது தலையை ஒரு விதப் புன்னகையுடன் பார்த்தார்.  இரண்டு நிமிடத்தில் வேலை முடியும் என்னும் போது அந்தக் குரலில் அவரின் குதூகலம் புரிந்தது.

நானும் இப்படித் தான் வெட்டவேண்டும் என்று ஆணையிட்டப‌டியே அவர், என்னைச்சு சுற்றிக் கட்டிய கறுப்பு நிற போர்வையை ஏற்றுக்கொண்டேன். முதலில் காதோரமாக இலக்கம் 0 கட்டிங், பின்பு அதற்கு மேல் 1, அதன்பின் மயிர் இல்லையாதலால் நீ வெட்டத் வெட்டத்தேவையில்லை, காதுக்குள் இருக்கும் களைகளையும் அகற்றவேண்டும், அதே மாதிரி மூக்கு மயிரும் சிரைக்கப்படவேண்டும் என கட்டளையதிகாரியின் பாணியில் கட்டளைகளைப் பிறப்பித்துக்கொண்டிருந்தேன். அப்போது தான் அவர் என்னை இடைமறித்தார்.

அய்யா! உங்கள் காது மயிரை நான் கத்தியால் மளித்துவிடவா, அல்லது நூலால் அகற்றவா என்றபோது என்னடா இவன் புதினமாக நூல் என்கிறானே.. நமக்கு காதும் சற்று கேட்பதில்லையாதலால் நான் தான் ஏதும் பிழையாக விளங்கி விட்டேனோ என்று நினைத்து என்ன நூலால் அகற்றுவதா என்றேன். ஆம் அய்யா இது ஒரு புது டெக்நீக். இதன் மூலமாக அகற்றினால் காது மயிர் அடுத்த முறை முளைத்த வர ரொம்ப காலமெடுக்கும் என்றார்.

எனக்கு, இந்த காது மயிர் எனது யௌவனத்தை அழகைக் கெடுப்பது விருப்பமில்லையாதலால் சரி உன் நூல் தொழில்நுட்பத்தை காட்டு என்றேன்.

முதலில் ஒரு லட்சத்து எழுபத்திநாலாயிரத்து நானூற்று முப்பத்தி மூன்று மயிர்களுக்கும் ஒரு மெசினைப் பிடித்தார். அந்த வேலை ஏறத்தாள 40 செக்கன்கள் பிடித்திருக்கும். தற்போது எனது தலையில் இருந்த எண்பத்திஏழாயிரத்து இருநூற்றிப்பதினேழு (50%) நரை மயிர்களும் இன்றி நான் மிகவும் அழகான வாலிபனாக இருந்தேன்.

இப்படி நான் எனது அழகை மெய் மறந்து ரசித்துக்கொண்டிருந்த போது அவர் கையில் நூலை எடுத்ததையோ அதன் ஒரு நுனியை வாயிலும் மறு நுனியை கையிலும் பிடித்தபடியே எனது காதுக்கு மிக அருகில்.. ஆம் மிக மிக அருகில் வந்ததையோ கவனிக்கவில்லை நான். திடீர் என்று அவர் என்னை முத்தமிடுவது போல் வாயை பிடித்துக்கொண்டு என்னை நெருங்கி வருவது கடைக்கண்ணுக்கு தெரிந்த போது நான் திடுக்கி்ட்டு உட்கார்ந்தேன். அருகில் வந்தவர் சற்று பின்வாங்கி ஒரு கையால் ‌தலையைத் சரித்து காது அவருக்கு தெரியுமாறு வசதியாக வைத்துக்கொண்டார்.

பின்பு அவர் அந்த நூலை அங்கும் இங்கும் ஆட்டி எனது காது மயிர்களை பிடுங்கத் தொடங்கிய போது தான் எனக்கு விடயம் புரியத் தொடங்கியது. அப்போ வெள்ளம் தலைக்கு மேல் போயிருந்தது.

நானும் இப்படி வாயில் நூல் வைத்து ஆட்டி ஆட்டி ஏதோ செய்வதை கடைகளின் கண்ணாடிகளுக்கூடாக கண்டிருந்தாலும்  அதை என்னுடலில் அனுபவிப்பது அதுவே முதல் முறை. நான் ஆவ், ஆ, ஊ, ஊ என்று கத்துவதைக் கூட மனிதர் கவனிக்காமல் சுற்றாடலை மறந்து தனது குறியிலேயே கவனமாயிருக்கும் வேட்டைக்காரனைப் போல் தன் தொழிலிலேயே கவனமாய் இருந்தார். எனக்கு உயிர் போய்க்கொண்டிருந்தது. சற்று நேரத்தில் மற்றைய காதைக்கு மாறி அங்கும் தனது தொழிற்திறமையை அவர் காட்டி ஓயந்த போது சத்தியமாக என் கண்ணீல் கண்ணீர் திரண்டிருந்தது. (அது ஆனந்தக் கண்ணீரா என்று நீங்கள் கேக்கப்படாது .. ஆமா!)

அவரின் நூல் டெக்நீக் எனது காதில் ஆடிய ஆட்டத்தால் நான் ஆட்டம் கண்டிருந்தேன். நான் சகஜ நிலைக்கு திரும்ப எனக்கு சில நிமிடங்கள் பிடித்தது. அதன் ‌பின் நான் எழுந்து மெதுவாய் காதை தடிவியபடியே அவரைப் பார்த்தேன். அங்கு ஒரு மயிரும் இல்லை என்றார். டேய், நீ எனது காதையாவது விட்டு வைத்தாயே என்று நான் எனக்குள் நினைத்துக் கொண்டு அவருக்கான பணத்தைச் செலுத்தி வெளியில் வந்தேன். குளிர் காற்று மயிரில்லாத எனது தலையைத் தடவிப் போன போது  மனம் இப்படி சிந்தித்தது..

அய்யோ....  என்ட ஓஸ்லோ முருகா....  என்னால இந்த காது மயிர் புடுங்கினதயே தாங்ககேலாம இருக்கு.. இந்தப் பெண்கள் எப்படி கால்மயிர், கைமயிர், முகத்தில், மென் மீசை, கண் இமை ... என்று புடுங்கித் தள்ளுகிறாகள்?

மயிர் புடுங்க இவ்வளவு கஸ்டப்படும் அவர்களுக்கு சர்வதேச பெண்கள் தினம் என்று ஓரே ஒரு நாளை மட்டும் ஓதுக்கிக் கொடுப்பது மிகவும் கொடுமைய இருக்கிறது எனக்கு. எனவே முழுவருடத்தையும் சர்வதேச பெண்கள் தினங்களாக அறிவிக்கவேண்டும் என்று முன்மொழிகிறேன்.


ஒப்பனை நிலையங்களில் வீரம் செறிந்து, பல்லைக் கடித்தபடி   தங்களை அழகாக்கிக் கொள்ளும் எங்கள் தாய்க்குலத்து கண்மணிகளுக்கு, ஒரு நாள் மயிர் புடுங்கலிலேயே புறமுதுகிட்டோடும் இந்த விசரனின் வாழ்த்துக்கள். 

இந்தப் பதிவு உங்களின் வீரத்துக்கு சமர்ப்பிக்கப்படுகிறது.

மக்கா ...  இனிமேல் பாராவது நூலால் மயிர் புடுங்க வந்தீங்க.....  சாமி சத்தியமா கொன்ன்ன்னுபுடுவன் .. கொன்னு.



இன்றைய நாளும் நல்லதே.


.

”வம்ச விருத்தியால்” வந்த வினை


புகையிரதத்தில் ஏறி பயணப்பொதியை அருகில் வைத்துக்கொணடு குந்திக்கொண்டேன். கையில் முத்துலிங்கமய்யா எழுதிய வம்ச விருத்தி இருந்தது என்பதால் நமிதாவை கண்ட பழசுகள் மாதிரி எனது சுற்றாடலை மறந்து புத்தகத்தினுள் ஐக்கியமாகி்ப்போனேன்.

வம்சவிருத்தியில் முழுவிலக்கு என்றொரு கதை இருக்கிறது அக்கதையில் மிகவும் ஆழ்ந்து போயிருந்தேன்.

கதையின் நாயகன் கணேசானந்தன், நாயகி சங்கீதா. சங்கீதா தான் வாழ்ந்த ஆபிரிக்கநாட்டு குடியுரிமை கிடைத்தபின்தான் கணேசானந்தனை தொட விடுவாள், அதன் பிறகுதான் குழந்தை குட்டி எல்லாம் என்று சத்தியம் செய்திருந்ததனால் கணேசாணந்தன் அடிக்கடி குடியுரிமைக்கு விண்ணப்பித்துக் கொண்டிருந்தார். கணேசானந்தனின் அவசரம் அந்த குடியுரிமை வளங்கும் அதிகாரிகளுக்கு இல்லையாதலால் அவர்கள் இவரின் விண்ணப்பத்தை கண்டுகொள்ளாமல் இருந்த இடத்தில்தான் நான் அந்தக் கதையை அந்த புகையிரதத்தில் இருந்து வாசித்துக்கொண்டிருந்தேன்.

கதையில் அன்று கணேசானந்தனுக்கும் மனைவிக்கும் குடியுரிமை கிடைக்கிறது. கணேசாணந்தன் வேலைக்கு நிற்காமல் வீடு நோக்கி வம்ச விருத்திக்காக ஓடுகிறார். கதை இப்படி மிகவும் செக்சியாகவும், திரில் ஆகவும் போய்க்கொண்டிருக்கிறது. நானும் கணேசாந்தனின் வயதையும் காலங்களையும் கடந்திருப்பதால் கணேசானந்தனின் ஓவர் ஸ்பீட் நடவடிக்கைகளை ரசித்துக்கொண்டு அவர் பின்னால் மெய்மறந்திருந்த போதுதான் அது நடந்தது.

தற்செயலாக ஜன்னலால் வெளியே பார்த்த போது எனது இதயம் எனது தொண்டையால் வெளியே வந்து பல்லுக்குள் சிக்கியது போலிருந்தது. ஆம், நான் இறங்கி இன்னுமொரு புகையிரதம் எடுக்கவேண்டிய ஸ்ரேசனை கடந்து கொண்டிருந்தது புகையிரதம்.

நான் ஒஸ்லோ போகும் விமானத்தை பிடிப்பதற்காக லண்டனில் இருந்து விமானநிலையம் நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்தேன். ஏற்கனவே நேரம் தாமதமாகியிருந்ததால் பயந்து கொண்டிருந்தேன். இப்போது இன்னும் நேரம் தாமதமாகப்போகிறதே என்று பயம் தொற்றிக்கொண்டது.

அடுத்து வந்த ஸ்ரேசனி்ல் இறங்கியோடினேன். எனது அவசரம் புரியாத மற்றவர்கள் வழியை அடைத்தபடி நடக்க மனதுக்குள் தூசணத்தால், திட்டியபடியும் வாயால் எக்ஸ்கியூஸ்மீ எக்ஸ்கியூஸ்மீ என்றபடியும் படிகளை, அனுமான் பாய்ந்து பாய்ந்து கடலைக் கடந்து இலங்கைக்கு வந்தது போல் ஓடிப்போய் உதவியாளர் ஒருவரிடம் கட்வீக்கு எப்படி போவது என்றேன். அவரோ மிகவும் சாசுவதமாக பல்லு தோண்டும் ஈர்க்கால் பல்லைத் தோண்டி முடித்த பின், மூன்றாம் இலக்க ப்ளாட்போர்ம்க்கு போய், வரும் முதல் புகையிரதத்தில் "கிழப்பம் ஜங்ஸசன்" போ, அங்கிருந்து கட்வீக் போகலாம் என்றார். வாயு வேகத்தில் மூன்றாம் பிளாட்பாரத்தில் நின்றபோது அடுத்து வரும் புகையிரதம் 15 நிமிடங்கள் பிந்தி வரும் என கணணி காட்டிக் கொண்டிருந்தது. பாவி போற இடமெல்லாம் பள்ளமும் திட்டியும் என்று எனது நண்பர் சிவா சொல்வது ஞாபகத்தில் வந்து போனது. நேரமோ 11.40. எனது விமானம் 13.10க்கு வெளிக்கிடுவதாய் இருந்தது.

மனம் என்ன செய்யலாம் என்று சிந்தித்துக்கொண்டிருந்தது. எனது ஆற்றாமையை, "இந்தாளாலதானே இவ்வளவும்" என்று முத்துலிங்கமய்யவை திட்டித் திட்டித் தீர்த்துக்கொண்டேன்.

கணணியைப் பார்ப்பதும் தண்டவாளத்தைப் பார்ப்பதுமாக நேரம் போய்க் கொண்டிருந்தது. வம்ச விருத்தியை வாசித்த போது கணேசானந்தனின் திருவிளையாடலால் மனைவி வாந்தி எடுக்கிறாள், உணவை மறுக்கிறாள். அது கர்ப்பமா என்று அறிய கணேசானந்தன் மனைவியுடன் உற்சாகமாய் வைத்தியசாலைக்குப் போகிறார். அங்கு அது கர்ப்பம் அல்ல என்று தெரிவிக்கப்பட அவர்கள் இருவரும் துயருறுகிறார்கள்.

நானும் எப்படா இந்த புகையிரதம் வரும் என்று துயருற்றுக் கொண்டிருந்தேன். அப்போது ஒலிபெருக்கி ப்ளாட்போம் 6 இல் வரவிருக்கும் புகையிரதம் "கிழப்பம் ஜங்ஸசன்" போகும் என்றும், அப் புகையிரதம் இன்னும் ஒரு நிமிடத்தில் புறப்படும் என்பதும் ஒரு காதுக்குள்ளால் போய் மறு காதால் வெளியே வருமுன்பே நான் நாலுகால் பாய்சலில் மீண்டும் எக்ஸ்கியூஸ்மீ, எக்ஸ்கியூஸ்மீ என்றபடியே பாய்ந்தோடி 6ம் ப்ளாட்பாரத்தில் நின்றபோது புகையிரத்தின் கதவுகள் மூடப்படுவது தெரிந்தது.

கையில் இருந்த பயணப் பொதியை இரண்டு கதவுகளுக்கும் நடுவில் வைத்து கதவு மூடுவதை தடுத்து உட்புகுந்து கொண்டேன். ரேஸ் ஓடிய குதிரை போல் மேல்மூச்சும் கீழ்மூச்சும் சைட்மூச்சும் வந்து கொண்டிருந்தது.

"கிழப்பம் ஜங்ஸசன்" இல் இறங்கி 13ம் இலக்க ப்ளாட்பாரத்தை நோக்கி.... வாலில் கிடுகோலை கட்டுப்பட்ட மாடு ஓடவது போல தறிகெட்டு ஓட எனது பயணப்பொதி அதே வேகத்தில் பின்னால் ஓடி வந்து கொண்டிருந்தது. 13ம் ப்ளாட்பாரத்தில் இறங்கிய போது எனது புகையிரதம் புறப்பட்டுப் போனது.

வெறுத்துப்போய் கணணியைப் பார்த்தேன். நேரம் 11.58 என்றிருக்க அடுத்த புகையிரதம் 12.08க்கு என்றிருந்தது. எனது புகையிரதம் வந்தபோது கணேசானந்தனின் மனைவி தனக்கு இனி குழந்தை பிறக்காது என்னும் உண்மையை ஏற்கப் பழகியிருந்தார். அவருக்கு மீன் விற்கும் பெண்ணின் பெயர் "ஐலவ்யூ" (கதையை வாசித்தால் காரணம் புரியும்). "ஐலவ்யூ" விற்கும் மீனை மட்டுமே அவர் வாங்குவார். "ஐலவ்யூ" முதுகில் "கரிக்குருவி" என்னும் குழந்தையை சுமந்துகொண்டிருப்பாள்.

கட்வீக் புகையிரத்தில் ஏறி ஒரு இடத்தில் குந்திக் கொண்டேன். நேரம் 12. 10 எனக் காட்டிக் கொண்டிருந்தது.எனது போர்டிங் கார்ட்ஐ ஏற்கனவே ப்ரின்ட் எடுத்திருந்ததனால் அதை எடுத்துப் பார்த்தேன். கேட் 12.40க்கு மூடப்படும் என்றிருந்தது. எனது புகையிரதம் விமானநிலையத்தை அடைய 30 நிமிடங்கள் வேண்டும். நேரம் அப்போ 12.40 ஆகிவிடும். இன்றைய பயணம் அதோ கதிதான். இன்று புதிய டிக்கட் எடுப்பதானால் 300 டாலர் வேண்டும் என்று நினைத்தபடியே கணேசானந்தனின் பிரச்சனைக்குள் புகுந்தேன்.

நான் புகையிரதத்தால் இறங்கும் முன்.. கணேசானந்தன் ஒரு நாள் வேலையால் வீடு திரும்புகிறார். வீட்டினுள் ஆபிரிக்கப் பாட்டு கேட்கிறது. பாடலின் அர்த்தம் "கடவுளே நன்றி, என்னை மீட்டதற்கு நன்றி" என்றிருக்கிறதாம். உள்ளே மனைவி ஆபிரிக்கப் பெண்களைப் போல் பிருஸ்டத்தை ஆட்டி ஆட்டி நடனமாடுகிறாள். அது கணேசானந்தனுக்கு ரொமான்டிக் மூட்ஐ ஏற்படுத்துகிறது. அன்றிரவு அவர் சங்கீதாவை அருகே இழுத்தணைக்கிறார். அவர்களுக்கு நடுவே அவர்கள் தத்தெடுத்த கரிக்குருவி படுத்திருக்கிறாள். இந்த இடத்தில் தான் எழுத்தாளர் முத்துலிங்கமய்யா பெரியதொரு லாஜிகல் தவறு செய்கிறார்.

(அது பற்றி கேட்டு அவருக்கு மின்னஞ்சல் போட்டிருக்கிறேன். பதில் வந்ததும் சொல்கிறேன்.)

அதுவரை பொறுக்கமுடியாதவர்கள் "வம்சவிருத்தி" என்னும புத்தகத்தை வாங்கி 6வது கதையாகிய "முழுவிலக்கு" கதையின் இறுதிக்கு முன் பந்தியை வாசியுங்கள். உங்களுக்கு அந்த விடயத்தில் அனுபவமிருந்தால் அந்த லாஜிக் பிழை புரியலாம்.

நேரம் 12:43க்கு புகையிரதம் விமானநிலையத்தை அடைந்து நிற்க முதலே, பீக்கு முந்திய குசு மாதிரி பயணப்பொதியுடன் கதவருகில் நின்று, புகையிரதம் நின்றவுடன் வெளியே பாய்ந்து, ஓடி, படிகளில் தாவி, நடந்து ஓடி, 12.50க்கு கையில் இருந்த தண்ணிப்போத்தலை குப்பைக்குள் எறிந்து வேர்த்தொழுக ஓடிவரும் என்னைக் கடுமையாக பார்த்தபடியே நிறுத்தினார் கண்டிப்பான முகத்தையுடைய, கண்ணாடி போட்ட, பெருத்த உதட்டையும், பிட்டத்தையும் கொண்ட கணேசானந்தனின் கண்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர்.

எனது நிலையை விளக்கினேன். தலையை ஆட்டியபடியே குனிந்து கண்ணாடிக்கு மேலால் பார்த்து யூ ஆர் ஆல்ரெடி டூ லேட் என்றார். நான் பாஸ்போட்டையும், கையில் இருந்த "வம்சவிருத்தி" புத்தகத்தையும் மேசையில் வைத்தேன். பாஸ்போட்டைடையும் என்னையும் நாலைந்து தடவை பார்த்தார். பின்பு மேசையில் இருந்த வம்சவிருத்தி புத்தகத்தின் பின்னட்டையில் இருந்த ஒருஆணழகனைக் கடைக்கண்ணால் பார்த்தபடியே தொலைபேசியில் தொடர்பு கொண்டார். பதில் கிடைக்கவில்லை. என்னை வா என்றழைத்தபடியே நடந்தார். அவர் பின்னால் நடந்த போது கணேசானந்தனின் மனைவி ஆடிய நடனம் நினைவிலாடியது.(ரொமான்டிக் மூட் வரும் நிலையில் நான் இருக்கவில்லை). பலர் வரிசையில் காத்திருந்தார்கள். அவர்களைத் கடந்து என்னை சிறப்பு விருந்தினன் போல் அழைத்துப்போய் பாதுகாப்பதிகாரியிடம் ஏதோ சொன்னார். அவரும் ஒரு கறுப்பினத்தவராயே இருந்தார். பெல்ட், கணணி, திறப்புகள், பணப்பை, சப்பாத்து எல்லாவற்றையும் கழட்டி வைத்தேன்.

பாதுகாப்பு கதவை "ஒஸ்லோ முருகா" "ஒஸ்லோ முருகா" என்று சொல்லியபடியே கடந்தேன். நம்மூர் முருகனா கொம்பா? கேட்டமாதிரியே மனிதர் என்னை ஒரு சிக்கலில்லாமல் வெளியேற்றிவிட்டார். மடிக்கணணி, பணப்பை, திறப்புகள், இத்தியாதி இத்தியாதி பொருட்களை எல்லாவற்றையும் பயணப்பையில் அடைத்தெடுத்து ஓடினேன். பெல்ட் கட்டாததால் காற்சட்டை களன்று விடும் நிலையிலும், ஓடினேன் ஓடினேன். கட்வீக் விமான நிலையத்தின் கேட் 20 வரை ஓடினேன். நகரும் படிகளிலும் நகராத படிகளிலும் ஓடினேன். நேரம் 12: 57 க்கு மரதன் ஓடிய களைப்பில் 20ம் இலக்க வாசலில் நின்றேன்.

ஒஸ்லோ முருகனின் கருணையே கருணை, கதவு திறந்து கிடந்தது. கதவருகில் ஒரு பாதுகாப்பதிகாரியுடன் ஒரு சிறுவனும் அவனின் அப்பாவும் சண்டை பிடித்துக் கொண்டிருந்தார்கள். சிறுவனின் கால்பந்தை (காற்றடித்திருந்த நிலையில்) அனுமதிக்க முடியாது என்றார் பாதுகாப்பதிகாரி. தகப்பனோ அதை விட்டு விட்டு வா என்றார். அவனோ கொலைவிழுந்த மாதிரி பயங்கரமாக கத்திக் கொண்டிருந்தான். பாதுகாப்பாளன் எனது விபரங்களைப் பார்த்து என்னை உள்ளே விட்டான். அந்த சிறுவனைக் கடந்த போது அவனின் பார்வை என்னை ஏதோ செய்ய எனது மூளையில் திடீர் என்று ஒரு மின்னல் அடித்தது (வம்ச விருத்தியில் "ஒரு சதம்" என்னும் கதையில் (62ம் பக்கம்) இப்படி ஒரு மின்னலடிக்கிறது).

எனது பேனையை எடுத்து களட்டி உள்ளிருந்த கூர்மையான பகுதியினால் பந்தின் காற்றை அகற்றினேன். குழந்தை பந்தை மகிழ்ச்சியாய் கட்டிக்கொள்ள, தகப்பன் நன்றி என்றார். அண்ணண் வடிவேல் போல் இதெல்லாம் அண்ணணுக்கு சகஜமப்பா போல் புன்னகைத்து, விமானத்தினுள் புகுந்து கொண்டேன். விமானம் நோர்வேயை நோக்கி பறக்கத் தொடங்கியது. மடிக்கணணியை எடுத்து "வம்ச விருத்தியால்" வந்த வினை என்று தலையங்கம் போட்டேன்.



பெருமைமிக்க முத்துலிங்கமய்யாவுக்கு இது சமர்ப்பணம்.
 
 


.