தங்கத்தில் செய்த விளாம்பழம்



எனது அம்மாவுக்கு ஒரே ஒரு மருமகன்தான் இருக்கிறார்.

எனக்கும்‚ தம்பிக்கும் ஒரே ஒரு மச்சான்தான் இருக்கிறார்.

தங்கைக்கும் ஒரே ஒரு கணவர்தான் இருக்கிறார்.

இந்த மூன்று பாத்திரங்களிலும் சிங்கம்போல் வாழ்ந்துகொண்டிருப்பதும் ஒரே ஒரு ஜீவன்தான்.

அவரை நான், அவர் அரைக்காற்சட்டையோடு ஏறாவூர் புகையிரத நிலையத்திற்கருகில் மூக்கால் வழிய வழிய ஓடித்திரிந்த காலத்தில் இருந்து அறிவேன்.

எனவே அவரை .. டேய்‚ வாடா.. போடா என்று அன்பாகத்தான் அழைப்பேன். தங்கையை கட்டியதற்குப்பின்னும் மரியாதை சற்றேனும் அதிகரிக்கவில்லை. அவன் இதுபற்றிக் கவலைப்படுவதில்லை. நீங்களும் கவலைப்படாதீர்கள்.

அவனைப் பார்த்தால் 90களில் தமிழ்த்திரைப்படங்களில் நடித்த அரவிந்தசாமியோ என்று நீங்கள் நினைப்பீர்கள். அந்தளவு ஒற்றுமை இருக்கிறது அவர்களிருவருக்கும்.
வசிப்பதோ சிட்னி நகரத்தில். தொழில் வியாபாரக் காந்தம். அதாவது Business Magnet.

பில்கேட்சுக்கே Business சொல்லிக்கொடுக்கக்கூடிய திறமை அவனுக்கிருக்கிறது.

இப்படியானப்பட்ட அவன் செய்த ஒரு வியாபாரம்பற்றிய சிறிய கதைதான் இது.

இரண்டு நாட்களுக்கு முன் கொழும்பில் தங்கியிருந்தபோது கடும் வெய்யில். நான் ஒரு விளாம்பழ விரும்பி என்பதை அவன் நன்கு அறிவான். அவனுக்கும் விளாம்பழத்தில் காதல் உண்டு.

”விளாம்பழம் கரைத்துக் குடிப்போமா?” என்றான்.

”ஓம்” என்றேன்.

பையன், சப்பாத்து அரைக்காற்சட்டை கூலிங்கிளாஸ் சகிதமாகப் புறப்பட்டான்.

பழக்கடை வீட்டில் இருந்து 5 நிமிட நடை. ஆனால் நேரம் 15 .. 30 .. 45 நிமிடங்களான பின்பும் பையனைக் காணவில்லை.

மாமியார் பதட்டப்பட்டார்.

யாருக்கோ வியாபாரம் கற்பிக்கிறான் என்று நான் நினைத்தேன்.

ஆனால் தங்கையோ ”மன்னவனைக் காணவில்லை” என்ற மகிழ்ச்சியில் குதூகலித்துக்கொண்டிருந்தாள்.

”அம்மா .. டேய் போய் பார்த்துவிட்டு வாடா” என்றபின் நான் புறப்பட்டேன்.

பழக்கடைக்குச் சென்று ”அரவிந்தசாமிபோல ஒருவர் வந்தாரா” என்றேன். பழக்கடைக்காரர் உதட்டைப் பிதுக்கினார்.

சற்றுத்தூரம் நடந்தேன் .. அரவிந்தசாமி கையில் விளாம்பழத்துடன் ஆடி ஆடி வந்துகொண்டிருந்தான்.

”என்னய்யா.. வளாம்பழமரம் தேடிப்போனாயா” என்றேன்.

”இல்லை… வெள்ளவத்தை சந்தையில் நல்ல பழம் இருக்கும் என்பதால் அங்கு போயிருந்தேன்” என்றான்.

அதன்பின்‚ தான் எவ்வாறு விலைகுறைத்து விளாம்பழம் வாங்கியது என்பதை ரசித்துச் ரசித்துச் சொன்னான்.

விளாம்பழம் கிடைத்ததே பெரியவிடயம் என்றும் எனது ஆசை மச்சான் பேரம்பேசுவதில் கில்லாடிதான் என்றும் நான் நினைத்து மகிழ்ந்தேன்.

இருவரும் உரையாடிக்கொண்டே எங்களுக்கு பழக்கமான பழக்கடையைக் கடந்தபோது எனக்கு வாழைப்பழ ஆசை வந்தது.

கடையில் புளிவாழைப்பழம் வாங்கியபோது கடைக்காரர் எனது மச்சானிடம் ”அய்யா! விளாம்பழம் என்ன விலைக்கு வாங்கினீர்கள் என்றார்”.

எங்கள் குடும்பத்து குலவிளக்கும் வியாபாரக் காந்தமுமாகிய அரவிந்தசாமி நெஞ்சை நிமிர்த்தி பெருமையாக ஒன்று 90 ரூபாய் என்றதும் … கடைக்காரர்

”அய்யா விழாம்பழத்தினுள் தங்கமா இருக்கிறது?” என்றாரே பார்க்கலாம் நம்மாளுக்கு முகம் கறுத்துவிட்டது.

”உங்களிடம் என்னவிலை?” என்றார்.

”உங்களுக்கு நான் 25 ரூபாவுக்கு தந்திருப்பேன் என்றார் கடைக்காரர்.

நான் வியாபாரக் காந்தத்தை திரும்பிப் பார்த்தேன்.

காந்தம் விறு விறு என்று நடந்துகொண்டிருந்தான். நடையில் கடும் சோகம் தெரிந்தது.

கடைக்காரர் என்னிடம் .. அய்யாவிடம் சொல்லுங்கள் … இப்படி சப்பாத்து அரைக்காற்சட்டை கூலிங்கிளாஸ் உடன் கடைக்கு போவேண்டாம் என்று‚ அப்படிப்போனால் இப்படித்தான் ஆகும் என்றார்.

வீடு வந்தேன்.

இந்தாருங்கள் விளாம்பழம் கரைத்திருக்கிறேன் குடியுங்கள் என்றான் நான் செருப்பைக் களற்றுவதற்கு முன்பே.

குரலில் பாசமும் நேசமும் வழிந்தோடியது. மச்சானல்லவா என்று நினைத்தேன்.

கண்ணை மூடி ஏகாந்த உலகில் சஞ்சரித்தவாறே விளாம்பழச்சாறினை உறுஞ்சுகிறேன்‚ காதருகில் இப்படி கிசுகிசுத்தான்.

”சத்தியமாக இந்தக் கதை மற்றையவர்களுக்குத் தெரியவரக் கூடாது‚ நமக்குள் இருக்கட்டும்” என்றான்.

ஒஸ்லோ முருகன் சத்தியமாக ஒருவருக்கும் கடைசிவரைக்கும் சொல்லமாட்டேன் என்று கையில் அடித்துச் சத்தியம் செய்திருக்கிுறேன்.

சத்தியம் செய்ததைப்போன்று நான் ஒருவருக்கும் சொல்லவில்லை.
எழுதுவதற்கும் சொல்வதற்கும் வித்தியாசம் உண்டல்லவா..

கணிணியுலகப் பள்ளி

இன்று ஒரு சிறு பயலுக்கு சில பாடங்கள் கற்பிக்கத்தொடங்குவதாக ஒப்பந்தமாகியிருந்தது.
பையன் கொப்பியும் பென்சிலுமாய் வருவான் என்று நினைத்திருந்தேன். அவன் iPadஉடன் வந்தான். எனக்கு சற்று கடுப்பாகியது.

”எங்கேயடா கொப்பி” என்றேன்.

ஒரு புழுவைப்பார்ப்பதுபோல அவன், என்னைப் பார்த்தான்.


என்ன பார்வை என்பது போல நான், அவனைப் பார்த்தேன்.


”உனக்கு ஒன்றும் தெரியாது என்று பலத்த மரியாதையோடு ஆரம்பித்து, எங்கள் பாடசாலையில் iPad இல்தான் எல்லாம் நடைபெறுகிறது. வீட்டுவேலையும் அங்கேதான் இருக்கிறது. என்று iPadஐ தட தட வென்று தட்டினான், ஆட்காட்டி விரலை அங்கும் இங்கும் இழுத்தான். திரையில் என்ன என்னவோல்லாம் தோன்றி மறைந்தன.

”பார்... இது தான் நீ கற்பிக்கவேண்டியது”என்றான்

பார்த்தேன். அவனது வீட்டுவேலை என்ன என்று அங்கு எழுதியிருந்தது.

”வீட்டுப்பாடங்களுக்கு உதவி தேவை” என்றான்.

”என்ன வீட்டுப்பாடம்” என்றேன்

மந்திரவாதியைப்போல் iPad இல் தட்டினான். அது வீட்டுப்பாடத்தைக் காட்டியது.

சற்று விளங்கப்படுத்தினேன்.

அவனுக்கு கற்பூரப்புத்தி.

கற்றதை கொப்பியில் எழுது என்றேன்.

இப்போதும் ”புழுவைப் பார்ப்பது போன்று என்னைப் பார்த்தபடியே..

”கொப்பியா? எதற்கு?”

”வீட்டுப்பாடத்தை எழுத”

”ஏன் கொப்பியில் எழுதணும்?”

”சொன்னதைச் செய்”
”மாட்டேன்”

”ஏன்”

நாங்கள் iPad இல் தான் வீட்டுவேலை செய்வோம்”

எனக்கே காதில் பூச்சுற்றுகிறான் என்று நினைத்தபடியே

”சரி .. எங்கே காட்டு பார்ப்போம் என்றேன்”

அவனின் விரல் நர்த்தனமாடியது.

ஆசிரியரின் கேள்விகளை வாசித்து, என்னுடன் விவாதித்து பதிலளித்தான். அப்புறமாக அதை ஆசிரியருக்கு அனுப்பினான்.

”உனது வீட்டுவேலை பதில்கள் கிடைத்துள்ளன”. நன்றி என்று iPad பதிலளித்தது.

அவன் என்னை நிமிர்ந்து பார்ப்பதற்கிடையில் அவனுக்கு இரண்டு சிக்கலான கணக்குகளைக் கொடுத்து எனது சிக்கலைத் தீர்த்துக்கொண்டேன்.

இனிவரும் காலத்தில் இவனை எப்படி சமாளிப்பது என்று பலமாய் யோசித்துக்கொண்டிருக்கிறேன்.

21.01.2016

காலத்தைக் காயாதே மனதே.



காலத்தைக் காயாதே மனதே, என்ற பெருந்தத்துவத்தை கடந்தபோன சில நாட்கள் கற்பித்துப்போயிருக்கின்றன.

இரண்டு நாட்களக்கு முன் ஒரு பெண்குழந்தையின் முன் உடைந்தழுதேன், இன்று அப்படியானதொரு பெண்குழந்தையினால் மனது நிரம்பி கண்கலங்கியவனாகவும் காலம் என்னை கண்டிருக்கும்.

காலம் ஒரு சூனியக்காரியா அல்லது வரம் தரும் தேவதையா? விடைதெரியா பெருங் கேள்விகளக்குள் இதுவும் ஒன்று.

காலத்தைக் கண்டு அறிய, அனுபத்தை ஒரு துணையாயகக் கொள்ளலாமேயன்றி அதனை துல்லியமாக அறிவிப்பவர் எவருமிலர்.

ஆனால், காலத்தராசு வாழ்க்கைக்காலத்தில் பக்கம் பக்கமாக சாய்ந்தாலும் இறுதியில் சரியாகவே நிறுக்கிறது என்ற எண்ணம் வலுப்பெற ஆரம்பித்துள்ள காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறேன்.

ஐப்பசிமாதம் எனது இளைய மகளின் பிறந்தநாள். லண்டன் சென்று சில மணிநேரங்களை அவளுடன் கழித்திருந்தேன். உணர்ச்சிகளின் கொந்தளிப்பும், பதட்டமும், தோல்வியடைந்த தந்தை என்ற உணர்வும் என்னை ஆட்டிப்படைத்துக்கொண்டிருந்தது.

அடிக்கடி அவளின் தலைக்கோதிவிட்டபோது அவள் திரும்பிப்பார்த்து தோளில் சாய்ந்துகொண்ட நேரங்களில் கண்ணீரை கட்டுப்படுத்த முடியாதிருந்தேன்.. அவளைப் பிரியும்போது எல்லாமே உடைந்துபோனது. ”அப்பா அழாதே” எனறு அவள் என்னை அணைத்துக்கொண்டபோது உடைந்தே போனேன். எனது பலவீனத்தின் உச்சம் இந்த இடம்தான்.

காலமானது இவ்விடத்தில் குரூரமானதொரு சூன்யக்காரிபோன்றே என்னுடன் நடந்துகொண்டது.

நோர்வே வந்ததும் வேலைகளில் மனது ஈடுபட்டதும் மனம் இலகுவாகிப்போனது.
இனி வருவது ஐப்பசிமாதம் ஒரு நிகழ்வில் நடந்த கதை:

அவளை நான் அதிகமாக அறியேன். அவளுக்கு 9 – 10 வயதிருக்கலாம். நாம் சற்று அறிமுகமானவர்கள்தான்.

காணும் இடங்களில் எல்லாம் என்னுடன் தனவி விளையாடும் குணம் அவளிடம் எப்படியோ வந்துவிட்டது. எங்கு கண்டாலும் அவளாகவே தனவுவாள். எனக்கும் அது பிடிக்கும்.
நேற்றும் அவள் வந்திருந்தாள். நாள் முழுவதும் வேலை என்பதால் நிகழ்வின் முடிவிலேயே அரங்கத்தினுள் செல்ல முடிந்தது.

கண்டதும் பாய்ந்தோடி வந்தாள். முதுகில் தட்டிவிட்டு ஓடினாள். அதன் அர்த்தம் எனக்குத் தெரியும். ”எங்கே பிடி பார்க்கலாம்” என்பதே அது. கலைத்தோடினேன். முத்துக்களை சிந்தியவாறே ஓடினாள். அரங்கின் உள்ளே ஆடலும் பாடலும். நாம் வெளியே விளையாடிக்கொண்டிருந்தோம்.

சரி.. வா உள்ளே போகலாம் என்று அழைத்தாள். போனோம். ஒரு இருக்கையில் உட்கார்நது கொண்டேன். அவள் மாயமாய் மறைந்திருந்தாள்.

“மதராசிப் பட்ணம்”த்தில் இருந்து மனதை மயக்கி தாலாட்டும் ஒரு பாட்டு. பாடலில் என்னை மறந்திருக்கிறேன். திடீர் என வந்து என் மடியில் வந்து குந்திக்கொண்டாள். தன் கைகளை, என் தலையை சுற்றி மாலையாகப்போட்டு, மார்பில் சாய்ந்துகொண்டு கால்களை ஊன்றி என் மடியை அசைத்தாள். நானும் தாலாட்டுவது போல் அசைக்கலானேன்.

அவளும் பாடலை ரசிக்கிறாள் என்றே உணாந்தேன். நாம் இடத்தை மறந்தோம்… காலத்தை மறந்தோம். என் பூக்குட்டி என்னிடம் வந்துவிட்டது போலிருந்தது அந்த சில கணங்களும்.
காலம், என் மனதுக்கு தந்த ஆறுதலான அமைதியான உணர்வை என்னவென்பேன். அற்புதமானதொரு நிகழ்வு அது.

காலமானது வரம் தரும் தேவதை என்பதை உணர்ந்த கணங்கள் அவை.
பாடல் முடிந்தவுடன் எழுந்து மறைந்துபோனாள். நிகழ்வு முடியும் தறுவாயில் நான் வேலையாய் நின்றிருந்தேன். “நான் சென்று வருகிறேன்” என்று கையைக் காடடினாள். நானும் கையைக் காட்டினேன். அப்புறமாய் மறைந்துவிட்டாள்.

திடீர் என என்னை யாரோ பின்புறமாக அணைத்தபடி என்னில் சாய்வதுகொள்வதுபோல் இருந்தது. கையின் அளவில் அது யார் என்று புரிந்தது. என்கைகள் அவளின்கையைப் பற்றிக்கொண்டது. ஓரிரு செக்கன்கள் மட்டும். நான் சுதாரிததுக்கொள்வதற்கிடையில் எதுவுமே போசாது ஓடிவிட்டாள்.

கண்கலங்கிப்போனது அவளது பேரன்பில்.

இப்போதும் அந்த நம்பிக்கை மிகுந்த சிறு கைகளின் பாதுகாப்பான உண்ர்வை என் மனது உணர்ந்து கொண்டிருக்கிறது.

காலத்தை காயாதீர்கள் நண்பர்களே.
காலத் தராசு நியாயனமானது.

18. October 2015